மேன் புக்கர் விருது 2017 - கேள்வி பதில்கள்
அமோஸ் ஓஸ்
“Judas” நூலுக்காக அமோஸ் ஓஸ் மற்றும் அவருடைய மொழிபெயர்ப்பாளர் நிக்கோலஸ் டி லான்ஞ் ஆகியோர் 2017-ம் வருட அகில உலக மேன் புக்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்தவர்கள்.
Words Without Borders (WWB): நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?
அமோஸ் ஓஸ்: ஒரு சிறுவனாக நான் சற்று குள்ளமானவன், மிகவும் மெலிந்தவன், மிகுந்த கூச்ச
சுபாவம் கொண்டவன். பள்ளியில் நல்ல படிப்பாளி அல்ல, விளையாட்டிலும் சிறந்தவன் அல்ல,
நகைச்சுவையிலும் பொழுது போக்கு அம்சங்களிலும் கூட அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை.
பெண்களைக் கவர்வதற்காக எனக்குத் தெரிந்த ஒரே வழி பல விதமான கதைகளை உருவாக்கிக் கூறுவதுதான்.
இப்படித்தான் நான் எழுத்தாளன் ஆனேன். நான் ஏன் கதைகளைச் சொல்வதிலும் அவற்றைப் புத்தகங்களாக
எழுதுவதிலும் லயித்திருக்கிறேன் என்பதற்கு இது ஒரு முதன்மையான காரணமாகவும் இருக்கலாம்.
WWB: உங்கள்
நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த
மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின்
குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள்
எழுத்து புறக்கணிக்கிறது?
அமோஸ் ஓஸ்: நான் எனது எழுத்தை நீண்ட சூழலுக்குள் பார்க்கவில்லை. நான் செயல்படும்
போது, எனது பார்வைகள் நாகரீகத்தின் மீதோ, சமூகம், கலாச்சாரம் அல்லது கருத்தியல் மீதோ
கட்டமைக்கப்படுவதில்லை. எழுதுதல், அழித்தல் மற்றும் சரியான பெயர்ச் சொல்; சரியான வினைச்சொல்,
உரிச்சொல்; வாக்கியத்தின் ஒலியியைபு; மற்றும் உரையாடலின் துல்லியத்திற்கான தேடலில்
திரும்பத் திரும்ப எழுதுதல் பற்றிய பதைபதைப்பிலிருந்து நான் விலகிச் சென்று விடுகிறேன்.
எனது செயல் ஒரு மூலக்கூறு. ஒரு அரசியல் சிந்தனையாளராக, ஒரு இஸ்ரேல் யூதராக, ஒரு அமைதி
இயக்கச் செயற்பாட்டாளராக, மற்றும் ஒரு இலக்கிய ஆசிரியராக பலவிதமான சிக்கல்கள் பற்றிய
கருத்து எனக்கு உண்டு, ஆனால் இது முன்னரே வேறு விதமான கேள்விக்காகப் பதில் அளித்ததில்
உள்ளது.
WWB: உங்கள்
எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?
அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?
அமோஸ் ஓஸ்: எனக்கு மிகவும் பிடித்த இலக்கியப் படைப்பு Don
Quixote.
சில வருடங்களுக்கு ஒரு முறை நான் அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன். நான் அந்தக்
கதை நாயகனை மிகவும் நேசிக்கிறேன். அவன் முதல் நாவலின் எதிர்-நாயகனும் கூட. அந்த நாவல்
முதல் நவீன நாவலும் கூட. முதல் பின்நவீனத்துவ நாவலும் அதுதான். அது முதல் கட்டுடைப்பு
நாவலாகவும் உள்ளது. டான் க்விக்ஸாட்டின் மரபார்த்த அம்சங்களை இதுவரை உருவாக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான இலக்கிய, திரைப்பட உருவங்களில் காணலாம். அந்த மரபணுக்களில் சில ஒவ்வொரு
ஒற்றை பிந்தைய-க்விக்ஸாட் மானுட வாழ்விலும் இருக்கக்கூடும்.
ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்
“Fish Have No Feet” நூலுக்காக ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்
மற்றும் அவருடைய மொழிபெயர்ப்பாளர் பிலிப் ராஃப்டன் ஆகியோர் 2017-ம் வருட அகில உலக மேன்
புக்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்தவர்கள்.
Words Without Borders (WWB): நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?
ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்: எதேச்சையாக ஒருவர் எழுத்தாளராக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள்
ஒரு எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்; நீங்கள் ஒரு கலைஞனாக இருக்கலாம்
அல்லது இல்லாமலும் இருக்கலாம்; அது உங்கள் பிறப்புடன் தொடர்புள்ள ஏதோ ஒன்று, அதிலிருந்து
நீங்கள் எளிதாகத் தப்பித்து விட முடியாது. ஆனால் நான் மிகவும் தாமதமாகவே துவங்கினேன்,
இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு என நினைக்கிறேன்; அல்லது அது இங்கு அயர்லாந்தில்
மிகவும் தாமதம் எனக் கருதப்படலாம்... நான் என்னவாக இருந்தேன் என்பதை மட்டும் கணக்கிட
எனது காலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்; ஆனால் நான் அதைக் கண்டடைந்த நேரம் எனக்கு மிகத்
தெளிவாக நினைவில் இருக்கிறது. அது ஒரு அற்புதமான தருணம். முதல் முறையாக எனது உண்மையான
சுயத்தைச் சந்திக்கும் ஒரு போக்கில் சென்றதாக உணர்ந்தேன். அதுதான் “வசிப்பிடம்”. இன்னமும்
அப்படித்தான் இருக்கிறது. எழுத்து தவிர்த்த வாழ்க்கை உள்ளது என்பதை என்னால் சிந்தித்துப்
பார்க்க முடியாது, அது எனது மூச்சு, எனது இதயத்துடிப்பின் ஒரு பாகம். மேலும் கதையும்
கவிதையும் தான் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பது எனக்கு எப்பொழுதும் ஒரு தேவையாக
இருந்தது – முழுமையாக அதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். அனைத்துக் கலைகளையும் போல. மக்கள்
மீதும், அவர்களுடைய உணர்வுகள் மீதும், அவர்களுடைய பார்வைகள் மீதும், அவர்கள் எவ்வாறு
உலகத்தைக் காண்கின்றனர் என்பதன் மீதும், அவர்கள் எவ்வாறு தங்கள் உள் உலகத்தைக் காண்கின்றனர்
என்பதன் மீது அது தாக்கம் செலுத்த வேண்டும். இலக்கியம் என்பது வாழ்க்கையாக இருக்க வேண்டும்,
தனிநபருக்கும் சமூகத்திற்கும். அப்படி இருக்க முடியும், இருக்க வேண்டும்.
WWB: உங்கள்
நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த
மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின்
குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள்
எழுத்து புறக்கணிக்கிறது?
ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தச் சூழலில் எனது எழுத்தை வைத்து நான் சிந்திக்கவில்லை.
அந்த அர்த்தத்தில் அதை எங்கு வைக்க வேண்டும் என்பதில் நான் ஒரு போதும் வியந்ததில்லை.
எனது எழுத்தை வரையறை செய்வதில் எனக்கு ஆர்வமில்லை, பிறருடைய படைப்புகள் நான் எழுதியதைவிட
அதிகத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. நான் எனது படைப்புகளை உள்ளிருந்து பார்க்கிறேன்;
அதன் விளைவாக, மரங்களுக்காக மரத்துண்டுகளைக் காண்பதில் எனக்கு ஒரு சிக்கல் இருப்பதாகச்
சொல்ல முடியும்... அதைப் போலவே, என்னைப் பற்றி நானே விவரிக்க நான் சிறந்தவன் அல்ல.
நான் ஒரு கவிஞனாக எழுதத் துவங்கினேன். கவித்துவ பாணியில் எழுதிய – நட் ஹாம்ஸன், ஜோஸ்
ஸரமகோ, ஹெர்தா முல்லர் – மற்றும்/அல்லது வடிவத்தைப் புதுப்பிக்க முயன்ற ஃபாக்னர், இடாலோ
கால்வினோ, ஜேவியர் மரியாஸ் போன்றவர்களின் மீது எனக்கு எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
ஒரு புதினம் என்பது மிகவும் பரந்துபட்டதாக இருக்க முடியும். அதே நேரத்தில் அது யாவுமாகவும்
இருக்க முடியும்: ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை, ஒரு கோள அமைப்பு, ஒரு ராக் பாடல்,
ஒரு ஒப்பாரி, ஒரு இசைத் துணுக்கு, ஒரு உரசல் சப்தம், ஒரு கனவு... புதினத்திற்கான வாய்ப்புகள்
பெரும்பாலும் முடிவற்றவை; வடிவத்தை மேலும் ஏதேனும் ஒரு வழியில் விரிவுபடுத்தவே எப்பொழுதும்
முயற்சிக்க வேண்டும்.
WWB: உங்கள்
எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?
அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?
ஜான்
கால்மன் ஸ்டீஃபன்சன்: இருபத்தி ஐந்து-முப்பது வருடங்களுக்கு முன் அதிகமாகக் கவர்ந்த
ஒரு சில புத்தகங்களின் பெயர்களை எளிதாக உதிர்க்கலாம்; அதே போல அவை எனது எழுத்தின் மீது
தாக்கம் செலுத்தியனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனல் அவை என்னை மிகவும் கவர்ந்தவை.
எனக்குப் பறப்பது போல இருந்தது. தாமஸ் மன் எழுதிய Tonio
Kröger, மிக்கெய்ல் பல்ககோவ்
எழுதிய The Master and Margarita, ஹால்தர் லாக்ஸ்னஸ் எழுதிய World light,
ஹெமிங் வேயின் கிழவனும் கடலும் தாக்கம் பெற்ற மற்றொரு அயர்லாந்து எழுத்தாளரான குன்னார்
குன்னார்ஸன் எழுதிய Advent (or Good
Shepard), மாபெரும் படைப்பாளியின் Pan, மேலும் எண்ணற்ற கவிதைகள் – உதாரணத்திற்கு, சீஸர் வாலெஜோ எழுதிய The
Violence of the Hour- எனது எழுத்துகளின் மீது தாக்கம் செலுத்தின, தூண்டுதலாய்
இருந்ததன.
ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ்
“War and Turpentine” நூலுக்காக ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ் மற்றும்
அவருடைய மொழிபெயர்ப்பாளர் டேவிட் மெக்கே ஆகியோர் 2017-ம் வருட அகில உலக மேன் புக்கர்
விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்தவர்கள்.
Words Without Borders (WWB): நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?
ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ்: ஒரு விடலையாக குறிப்பேடுகளை
வைத்துக் கொண்டு, சில சிருங்காரக் கவிதைகள் – அவை எதைப் பற்றியவை என்பது சரியாகத் தெரிவதற்கு
முன்பே நான் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் தத்துவமும் கலைத் தத்துவமும் பயின்றேன்.
கல்வி கற்றவாறு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பத்தாண்டு காலகட்டத்தில் தேர்ந்த எழுத்தின்
மீது நாட்டம் வளர்ந்தது. முப்பதாவது வயதில் முதல் கவிதை நூலை வெளியிட்டேன்; அந்தக்
கால இலக்கியக் கோட்பாடுகள் துவக்கத்தில் என் மீது தாக்கம் செலுத்தின. ஃப்ராங்ஃபர்ட்
கோட்பாடுகளிலும் சோதனை எழுத்துகளிலும் நான் மயங்கிக் கிடந்தேன், ஆனால் மிக விரைவில்
என்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு, எனது சொந்த வழியைக் கண்டடைந்தேன்.
WWB: உங்கள்
நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த
மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின்
குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள்
எழுத்து புறக்கணிக்கிறது?
ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ்: மூன்று அதிகார மொழிகளைக்
கொண்ட பெல்ஜியத்தில் டச்சு மொழியில் எழுதும் ஒரு ஃபிளமிஸ் படைப்பாளியாக, ஜெர்மனி மற்றும்
இலத்தீன் தாக்கம் பெற்ற மிகவும் வேறுபட்ட இலக்கிய மரபுகளை நான் உள்வாங்கினேன். இந்தப்
பன்முகக் கலாச்சார அடையாளத்தை ஒரு பயனாக, ஒரு சலுகையாக நான் கருதினேன்.
WWB: உங்கள்
எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?
அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?
ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ்: ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு
விட்டு, மற்றவற்றை ஒதுக்குவது என்னால் இயலாது – ஒரு சில பெயர்களைக் குறிப்பிட வேண்டுமெனில்,
ஒருவருக்கு ஒருவர் முரண்பாடுமிக்கவர்களாக இருந்த ஹோல்டர்லின், போர்ஹே, ஃப்ளாபர்ட்,
நபக்கோவ், ஸீபால்ட் மற்றும் கோம்ப்ரோவிச் போன்ற எழுத்தாளர்களின் தாக்கம் பெற்றிருந்தேன்.
மேலும் நுண்கலை அகாடமியில் பத்தாண்டுகளாக இலக்கியம் மற்றும் கலைக் கோட்பாடுகள் பற்றி
நான் போதித்துக் கொண்டிருந்தேன். பன்முகக் கலாச்சாரச் சூழலில் வாழ்ந்து கொண்டு, ஐரோப்பிய
அளவில் மொழியியல் சிறுபான்மையை ஏற்றுக் கொண்டு, நான்கு மொழிகளில் பரவலாக வாசிக்கிறேன்.
இதை ஒரு இலக்கியச் சுதந்திர வடிவமாகக் கருதுகிறேன்.
“Mirror, Shoulder, Signal” நூலுக்காக டோர்த்தி நோர்ஸ் மற்றும்
அவருடைய மொழிபெயர்ப்பாளர் மிஸா ஹோயெக்ஸ்த்ரா ஆகியோர் 2017-ம் வருட அகில உலக மேன் புக்கர்
விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்தவர்கள்.
Words Without Borders (WWB): நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா?
டோர்த்தி நோர்ஸ்: மொழியிடம் ஒரு குறிப்பிட்ட
இரக்க உணர்ச்சியுடனும், மொழி மூலமாக உலகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் ஒரு குறிப்பிட்ட
தேவையுடனும் நான் பிறந்துள்ளதாக நினைக்கிறேன். எனக்கு எட்டு வயதாக இருக்கும் பொழுது
ஒரு எழுத்தாளராக ஆக வேண்டும் என நான் விரும்பினேன். அன்று முதல் ஒரு நூலை வெளியிடும்
வரை, நான் எழுதினேன், வாசித்தேன், எழுதினேன், வாசித்தேன், எழுதினேன், வாசித்தேன்.
WWB: எழுத்தின் மீது
உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது?
டோர்த்தி நோர்ஸ்: அது எனது அடையாளத்தின்
ஒரு உறுதியான பகுதியாகவும் மாறியது. உண்மையில் நான் மேலும் தேர்ந்த ஒரு வல்லுநராக மாறினேன்.
நான் மேலும் கலைக்கக்கூடாத பல விசயங்கள் இருக்கின்றன, ஆயினும் மொழி வாயிலாக முன்னெடுத்துச்
செல்லும் சோதனை மாற்றமடையவில்லை (எனது எட்டு வயதிலிருந்து நான் சோதிக்கும் கருப்பொருள்கள்
மாற்றம் பெற்றிருந்தாலும் கூட).
WWB: உங்கள் இலக்குகளும்
குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?
டோர்த்தி நோர்ஸ்: காலப்போக்கில் நான் மாறவில்லை
என்றால், ஒரு விசித்திர மனித உயிராக இருந்திருப்பேன். நான் முழுமையான உயிர்ப்புடன் சதை, இரத்தத்தால் ஆனவள், நம்பிக்கை, அச்சங்களால்
ஆனவள், வெறும் பெளதீகப் பொருள் அல்ல இந்த டோர்த்தி. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்: நிச்சயமாக!
WWB: WWB: உங்கள்
நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த
மாதிரி இனம் காண்கிறீர்கள்?
டோர்த்தி நோர்ஸ்: டேனிஷ் இலக்கிய மரபில்
தோன்றிய குறைந்தபட்ச பாணியில் நான் எழுதுகிறேன் – நுட்பம், உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும்
போக்கு, உளவியல் கூறுகள் வரிகளுக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போக்கு. ஸ்வீடிஷ்
மரபிலும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். பல்கலைக் கழகத்தில் நான் ஸ்வீடன் மொழி பயின்றேன்.
எனது எழுத்தில் ஸ்வீடன் இருத்தலியல் உட்பொதிந்துள்ளது. எனவே, வடிவம்: டேனிஷ். உள்ளடக்கம்:
ஸ்வீடிஷ் (இது அதீதமாக எளிமைப்படுத்துவது).
WWB: உங்கள் எழுத்து
தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள்
எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?
டோர்த்தி நோர்ஸ்: எனக்குப் பிடித்த புத்தகங்கள்
என்றில்லை. எனது வாழ்வின் குறிப்பிட்ட காலகட்டங்களில் எனக்குப் பலவற்றை அர்த்தப்படுத்திய
புத்தகங்கள் இருக்கின்றன. ஏனெனில், நான் வாழ்கிறேன், மாற்றம் அடைகிறேன், அவை வாழ்கின்றன,
மாற்றம் அடைகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன் உண்மையில் என்னை ஏதோ செய்த புத்தகங்களில்
ஒன்று இங்க்மர் பெர்க்மனின் நினைவுகள், Laterna
Magica, ஆனால் அது எப்பொழுதும் எனக்குப் பிடித்த புத்தகமாக இருந்ததில்லை.
கிளாடியா ரேன்கின் எழுத்துகள் இப்போது உண்மையில் என்னை ஈர்க்கின்றன. இன்னும் ஐந்து
வருடங்களில் - நான் என்ன வாசிப்பேன், எதை நேசிப்பேன் என்று யாருக்குத் தெரியும்.
யான் லியான்கி
“The Explosion Chronicles” நூலுக்காக யான் லியான்கி மற்றும் அவருடைய
மொழிபெயர்ப்பாளர் கார்லோஸ் ரோஜஸ் ஆகியோர் 2017-ம் வருட அகில உலக மேன் புக்கர் விருதுக்கான
தேர்வுப் பட்டியலில் இருந்தவர்கள்.
Words Without Borders (WWB): நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?
யான் லியான்கி: சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பதினாறு அல்லது பதினேழு
வயதில் நான் ஆக்கப்பூர்வமாக எழுதத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் எனது வயிற்றை
நிரப்புவது, நாட்டுப்புறத்திலிருந்து தப்பித்துச் செல்வது மற்றும் ஒரு நகரத்திற்கு
இடம் பெயர்வது எனது மாபெரும் கனவுகளாக இருந்தன. ஒரு புதினத்தை எழுதியதன் விளைவாக நாட்டுப்புறத்திலிருந்து
ஒரு மாகாணத் தலைநகருக்கு இடம்பெயர முடிந்த ஒரு எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு,
என்னாலும் அவ்வாறு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் எழுதத் தொடங்குவது என்று முடிவு
செய்தேன். இரண்டு, மூன்று வருடங்களாக ஒவ்வொரு இரவும் தொடர்ச்சியாக எழுதிய பிறகு, ஒரு
புதினத்தை நிறைவு செய்ய முடிந்தது. அது ஏறக்குறைய மூன்று இலட்சம் சீனப் பாத்திரங்களை
உள்ளடக்கியது. அந்தப் படைப்பு வெளியிடப்படவில்லை. அதற்கு மாறாக, எனது தாயாருக்கு அடுப்பு
எரிப்பதற்காக அந்தக் காகிதங்கள் விறகாகப் பயன்படுத்தப்பட்டன.
எனது எழுத்து வாழ்வின் ஒவ்வொரு நிலையும் மாறுபட்ட குறிக்கோளால் இயக்கப்பட்டது.
நான் இளைஞனாக இருந்த போது, நாட்டுப்புறத்திலிருந்து தப்பிப்பதற்காக நான் எழுதினேன்.
ஆனால், பின்னர் நான் பணத்திற்காகவும் புகழுக்காகவும் எழுதத் தொடங்கினேன். அதன் பிறகு,
“பேசப்பட முடியாத மற்றும் எழுதப்பட முடியாத மெய்நிலையால்” ஊக்கம் பெற்றேன். நான் எழுதவில்லை
என்றால், நான் உயிருடன் இருக்கிறேனா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்படும்
என்று உணர்ந்ததால், தற்பொழுது நான் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், நான்
எழுதுவதற்கான காரணம், என்னால் பேசவும் சுவாசிக்கவும் முடியும் என்பதை நிரூபிப்பதற்காக.
WWB:
உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை
எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின்
குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள்
எழுத்து புறக்கணிக்கிறது?
யான் லியான்கி: சீன இலக்கிய வரலாறுகளில்
எனக்கு நம்பிக்க இல்லை. ஏனென்றால், அவை அதிகச் செயற்கைத் தன்மை கொண்டவையாக இருக்கவே
விழைகின்றன. இலக்கிய வரலாறுகள் அனைத்தும் மிகவும் தத்துவார்த்தமானவை. அவை இலக்கிய அல்லது
இலக்கிய-வரலாற்றுரீதியான அமைதியின்மைகளை முதன்மையாக அறிவிப்பதில்லை. சில வேளைகளில்,
நவீன, சமகால இலக்கியங்களின் வரலாறுகள் அதிகார இலக்கிய வரலாறுகளைவிட அல்லது அதிகாரத்தால்
அறிவிக்கப்படும் இலக்கிய வரலாறுகளைவிடச் சற்று அதிக உன்னிப்பாகப் பார்க்கப்படுகையில்,
செவ்வியல் இலக்கிய வரலாறுகளும் கருத்தியல் மற்றும் அதிகாரத் தாக்கத்திலிருந்து தப்ப
முடிவதில்லை. அதனால்தான் இவ்வாறு அழைக்கப்படும் இலக்கிய வரலாறுகளில் நான் அதிகமாகக்
கவனம் செலுத்துவதில்லை.
சீன எழுத்தாளர்களில், நான் குறிப்பாகத் தாக்கம் பெற்றதாகக் கண்டடைந்த முன் நவீனத்துவவாதி
வூ செங்’ன் மற்றும் அவருடைய நாவல் Journey
to the West. நவீன காலகட்டத்தில், என் மீது அதிகத் தாக்கம் செலுத்தியவர்
லூ ஜன். நான் புறக்கணிக்கும் இலக்கிய நடைமுறை எதுவென்றால், ”சீனப் பாணி மெய்யியல்”
மரபு என்று கூறுவேன். அது இன்று வரை சீன எழுத்தாளர்கள் மற்றும் சீன இலக்கியத்தின் மீது
ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சீனப் பாணி மெய்யியல் இலக்கியத்திற்கு மட்டும் பாதிப்பை
ஏற்படுத்தவில்லை, எண்ணற்ற தலைமுறைக் குழந்தைகளின் வாசித்தலையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
WWB: உங்கள் எழுத்து
தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள்
எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?
யான் லியான்கி: எனக்குப் பிடித்த புத்தகம் எதுவுமில்லை. பிற இலக்கிய மரபுகளிலிருந்து குறிப்பாக, தொன்மங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் உள் நாட்டு நாடகங்கள் எனக்குப் பிடிக்கும். இந்தத் தொன்மங்களும் நாட்டுப்புறக் கதைகளும் பல்வேறு மாறுபட்ட கலாச்சாரங்களின் கிரேக்க, ரோமானிய தொன்மங்களையும் நாட்டுப்புறக் கதைகளையும் உள்ளடக்கியவை. மேலும், தொன்மங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கலவையாக உள்ள பைபிளையும் பிற மதங்களின் வரையறைப் பிரதிகளையும் நான் அவ்வப்பொழுது பார்ப்பதுண்டு. நாடகத்தைப் பொறுத்தவரை, நான் சீன உள்நாட்டு நாடகங்களைக் குறிப்பிடுவேன். முப்பதுக்கும் அதிகமான மாறுபட்ட உள்நாட்டு நாடக மரபுகளை சீனா பெற்றுள்ளது. அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வித்தியாசமான கலாச்சாரங்களையும் சுவைகளையும் கொண்டவை. எனது எழுத்து இத்தகைய உள்நாட்டு நாடகங்களால் மிக ஆழமாகத் தாக்கம் பெற்றது. எனினும் இந்தத் தொன்மங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் உள்நாட்டு நாடகங்கள் எனது புதினங்களில் நேரடியாக நுழைவதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்கு மாறாக, ஒரு தூறல் போல, ஒரு தென்றல் போல அவை எனது கதைகளுக்குள்ளும் எனது மொழியினுள்ளும் வெகு நுணுக்கமாக ஊடுருவுகின்றன.
சமந்தா ஸ்வெப்லின்
“Fever Dream” நூலுக்காக சமந்தா ஸ்வெப்லின் மற்றும் அவருடைய மொழிபெயர்ப்பாளர்
மெக்கன் மெக்டோவெல் ஆகியோர் 2017-ம் வருட அகில உலக மேன் புக்கர் விருதுக்கான தேர்வுப்
பட்டியலில் இருந்தவர்கள்.
Words Without Borders (WWB): நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?
சமந்தா ஸ்வெப்லின்: எனக்கு நினைவிருக்கிறது,
எப்படி எழுதுவது என்பது கூட தெரியாத எனது ஐந்தாவது வயதில் உறங்குவதற்கு முன் எனது தாயாருக்கு
கதைகளைக் கூறி, அவற்றைக் குறிப்பெடுக்க அவரிடம் கேட்டு, சில சித்திரங்களைப் பின்னர்
இணைக்க ஏதுவாக பக்கங்களுக்கிடையில் சில வெற்றிடங்களை விடச் சொல்லிக் கேட்டதெல்லாம்
நன்றாக நினைவிருக்கிறது. எனவே, கதைகளைக் கூறுவதற்கான இந்த வேட்கை என்னிடம் எப்பொழுதும்
உள்ளதாக நினைக்கிறேன். எனது பதினேழாவது வயதில் முதல் முறையாக சில இலக்கியக் கூட்டங்களுக்குச்
சென்றதுண்டு. அது அடுத்த நகர்வாக இருந்ததென நினைக்கிறேன்: ஒரு பிரதியின் மீது எந்த
அளவுக்குச் செயல்பட வேண்டும் என்பதை உணர்வது -
அதிக துல்லியமாக, எளிமையாக, தெளிவாக இருக்க மீண்டும் மீண்டும் முயற்சிப்பது
– எழுதுதல் எனும் செயல்பாங்கின் ஒரு பகுதி. இந்த உபகரணங்களுடன் எனக்கான பரிச்சயமும்
அதிக ஆக்கப்பூர்வமாக நான் எழுதத் துவங்கியது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நான் கண்டடைந்தேன்.
எனது புகைப்படக் கலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னரும் எழுதுதல் என்பது எனது
முதன்மையான இலக்காக இருந்தது. அப்போதுதான் எனது முதல் இரண்டு புத்தகங்களை வெளியிட்டேன்.
ப்யூனஸ் ஏர்ஸிலிருந்து பெர்லினுக்கு இடம் பெயர்ந்தது எனது எழுத்திற்கான மற்றொரு நகர்வாக
இருந்தது. அது ஒரு புதிய, ஆழமான தனிமையைத் தந்தது. எழுதுவதற்கான அதிக நேரத்தையும் பல
வழிகளில் அதிக சுதந்திரத்தையும் அது தந்தது.
WWB:
உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை
எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின்
குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள்
எழுத்து புறக்கணிக்கிறது?
சமந்தா ஸ்வெப்லின்: அனைவரிடமிருந்தும் நான்
ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்கிறேன். எந்தப் பாரம்பரியத்துடனும், குழுவிடமும் முரண்பட்டதாக
நான் நினைக்கவில்லை. உண்மையில் நான் எனது தனிப்பட்ட ஆசான்களையே தெரிவு செய்திருக்கிறேன்.
அவர்கள்: அடோல்ஃபோ பயோ காசரஸ், அண்டானியோ டி பெனெடெட்டோ, சில்வினா ஒக்காம்போ மற்றும்
ஃபெலிஸ்பெர்ட்டோ ஹெர்னாண்டஸ். நான் இந்த “rioplatense” இலக்கியத்தால் முழுமையாகக் கவரப்பட்டதாக உணர்கிறேன். அந்த எழுத்தாளர்கள் அற்புதம்
பற்றி குறிப்பிட்ட சிந்தித்தல் போக்குகளைப் பெற்றுள்ளனர் என நினைக்கிறேன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன், ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் வாழ்ந்த திகிலூட்டும் விலங்குகளிப் பற்றிய அச்சம்
போல அல்ல, நமது நிஜ வாழ்வில் ஒரு ஐயப்பாட்டை உருவாக்குகிற, நாம் இழந்த ஏதோ ஒன்றான,
நாம் நினைப்பதைவிட மிகப் பெரியதான, முற்றிலும் வித்தியாசமானதான சிறு சிறு விசயங்கள்,
உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வுகள்.
யுவன் ருல்ஃபோ, அல்லது ஜூலியோ கொர்த்தாஸர் அல்லது மரியா லூயிஸா போம்பல் போன்ற
இலத்தீன்–அமெரிக்க எழுத்தாளர்களை வாசிப்பதில் நான் மோகித்திருந்தேன் என்பதை எப்பொழுதும்
என்னால் கூற முடியும். பின்னர் பிரிட்டிஷ், அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்தும் நான்
எழுதக் கற்றுக் கொண்டதுண்டு. முன்னவர்கள் அவர்கள் எவ்வாறு படைப்பில் இயங்கினார்கள்
என்பதைக் கண்டறிய அவர்களுடைய கதைகளைக் கட்டுடைத்து ஆராயத் தூண்டினார்கள். பின்னவர்கள்
ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு முக்கியம் என்பதையும், வாக்கியங்களுக்கு இடையில் உள்ள
பதட்டம், வாசிப்பவர் மனதில் எழுப்பச் சாத்தியமான அனைத்தையும் எனக்குக் காண்பித்தார்கள்.
எனவே நான் எழுதும் பொழுது, எனது பின்புலமாக உள்ள இந்த இரண்டு மாறுபட்ட பாரம்பரியங்களையும்
அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
WWB: உங்கள் எழுத்து
தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள்
எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?
சமந்தா ஸ்வெப்லின்: ஒரு கடினமான போக்கில்
என்னை அதிர்ச்சி அடையச் செய்த கடைசியாக வாசித்த புத்தகங்களில் ஒன்று அகோதா கிறிஸ்டோஃப்
எழுதிய Klaus
and Lukas. அவர் 1935-லிருந்து ஒரு ஹங்கேரிய எழுத்தாளர், அவருடைய
வாழ்வில் அதிக காலம் வாழ்ந்தது ஸ்விட்சர்லாந்தில். ஃப்ரெஞ்சு மொழியில் எழுதினார். ஆனால்
அவருடைய புத்தகங்களை வாசித்தால் நிச்சயமாக மாபெரும் புத்தகங்களைப் போல - அதீத சமகாலத்திய புத்தகங்களை வாசிப்பது போல இருக்கும்.
Klaus
and Lukas ஒரு செவ்வியல் தன்மை கொண்ட எளிமையான புத்தகம். கதை சொல்லுதலின்
ஒரு புதிய, சக்தி வாய்ந்த போக்கை அது அதனுள் ஒளித்து வைத்திருக்கிறது - வாக்கியங்களுக்கு
இடையில் கண்ணுக்குப் புலப்படாமல் ஊடாடும் அதி பிரம்மாண்டமான ஆனால் உறுதியான இன்மைகளையும்
துயரங்களையும் வெளிப்படுத்தும் மூன்று வித்தியாசமான “உண்மை”களிலிருந்து ஒரு கதைக்களத்தை கிறிஸ்டோஃப் கட்டி
எழுப்பும் போக்கு. இது நிச்சயமாக வாசிக்க உகந்த புத்தகம்.
Rioplatense:
அர்ஜெண்டினா மற்றும் உருகுவே பகுதிகளில் பேசப்படும் ஸ்பானிஷ் வட்டார மொழி.
தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment