Saturday, September 1, 2018

நவீன சீனக் கவிதை: மிங் டி நேர்காணல்

மிங் டி (மிண்டி ஷாங்கின் புனைப் பெயர்) சீனப் பெண் கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சீனாவில் பிறந்து வளர்ந்த அவர் கலிபோர்னியாவிற்குச் செல்வதற்கு முன் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு பயில அமெரிக்கா சென்றார். சீன மொழியில் எழுதப்படும் அவருடைய படைப்புகள் சீனாவிலும் தைவானிலும் வெளியிடப்படுகின்றன. ஆறு தொகுப்புகளின் ஆசிரியர்: D Minor Etudes (கவிதைகள்), Berlin Story (புகைப்பட-கவிதைகள்), Days Floating on Footage (கவிதைகள் மற்றும் திரைப்படக் கட்டுரைகள்), Chords Breaking (கவிதைகள்), Art of Splitting (கவிதைகள்) மற்றும் மிங் டி-யின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள். பின்வருவன உட்பட நான்கு மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை அவர் ஆங்கிலத்திலிருந்து சீன மொழியில் முழுமை செய்துள்ளார்: The Writer as Migrant (2010), Missed Time (2011), மற்றும் The Book of Things (வெளியிடப்பட உள்ளது), மேலும் இரண்டு தொகுப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இணை-மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட The Book of Cranes அமெரிக்காவில் உள்ள Tupelo Press-ஆல் வெளியிடப்பட உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பெய்ஜிங்கில் வெளியிடப்படும் Poetry East West சீன-ஆங்கில இருமொழி இலக்கியப் பத்திரிக்கையின் இணை-நிறுவனர் மற்றும் ஆசிரியர். மிங் டி-உடன் மஷாஸி முஸா மேற்கொண்ட நேர்காணல் இது.

மஷாஸி முஸா: கவிதையை மொழிபெயர்ப்பு செய்வதில் மிகச் சவாலான அம்சம் எது?

மிங் டி: மொழிபெயர்ப்பின் கடுமையான பாகம் எதுவென்றால் கவிஞரின் உள்மனதினுள் செல்வதும், அவர் எதை வெளிப்படுத்த முனையவில்லை என்பதை அறிவதும்தான். இருண்மையான மற்றும் பன்முக வாசிப்புகளை நான் முன்மொழிய விரும்புகிறேன். ஆயினும், தவறான பிரதிநிதித்துவங்களைத் தவிர்க்க விழைகிறேன். உதாரணத்திற்கு, ஒரு கவிஞர் தனது கவிதையில் ஒலியியைபுகளையும் இசைத் தன்மைகளையும் வெறுக்கும் பொழுது, மொழிபெயர்ப்பை இசைத் தன்மை ரீதியானதாக உருவாக்கினால் அது தவறான வழிகாட்டுதலாகும். வழக்கமாக முதல் சில வரைவுகளில் மொழியியல்ரீதியாக சரியான ஆக்கத்தைப் பெறலாம். ஆனால் சரியான குரலைப் பெறச் சற்று அதிகமாக ஈடுபட வேண்டும். ஒரு வரியை மொழிபெயர்க்க எப்பொழுதும் பல விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன. மறைமுகமான, பரிந்துரைக்கப்பட்ட, ஒளித்து வைக்கப்பட்டுள்ள அர்த்தங்களை வெளிப்படுத்தி, எண்ணம், உணர்ச்சி மற்றும் மனநிலைகளைக் காண்பிக்க நான் முயற்சிக்கிறேன்.  கவிதையை முன்னோக்கி இயக்குவது (படிமமும் எதிரொலிகளும், ஒலியியைபும் வேறுபாடுகளும், உணர்ச்சி அல்லது தர்க்கம், வார்த்தை விளையாட்டு, காட்சிரீதியான பெயர்ச்சி, முதலியன) மொழிபெயர்ப்பில் பிரதிபலிக்க வேண்டும்.     

எம் எம்: கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்க்க விருப்பமா அல்லது நேர்மாறாகவா?

மிங் டி: நிச்சயமாக ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்குத்தான். நான் பெரும்பாலும் சீன மொழியில் எழுதுகிறேன்... எட்டு வருடங்களுக்கு முன் கவிதை மாநாடுகளில் அதிகச் சுவாரஸ்யமான சீனக் கவிஞர்கள் சிலரைச் சந்திக்கும் வரை, மேலும் சமீப வருடங்களில் அவர்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளும் வரை நான் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவர்களுடைய படைப்புகள் வெகுவாக ஈர்க்கின்றன, ஆனால் அவர்களைப் பற்றி சீனாவுக்கு வெளியில் தெரியவில்லை என்பதை அறிந்தேன். கடந்த முப்பது வருடங்களில் சீனாவில் உள்ள “இருண்மை” அல்லது “அரூபக்” கவிஞர்கள் மற்றும் ஒரு சிறு எண்ணிக்கையிலான பின்-அரூபக் கவிஞர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் புதிய தலைமுறை மிகவும் வித்தியாசமானது. சீனாவின் புதிய கவிதை என்னிடம் அதிகம் பேசுகிறது. எனவே, நான் சீனக் கவிதைகளை மொழிபெயர்க்கத் துவங்கினேன். அமெரிக்கக் கவிஞர் ஆஃபா வீவருடன் இணைந்து செயல்பட்டேன். ஆனால் நாங்கள் மிக மெதுவாக முன்னேறிச் சென்றோம். நான் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டேன். மசடோனியாவில் ஸ்ட்ருகா கவிதை விழாவில் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சில கவிஞர்களைச் சந்திக்கும் வரை எனக்கு அத்தகைய ஊக்குவிப்பு எதுவும் தேவைப்படவில்லை. சமகாலச் சீனக் கவிதைகளின் மீதிருந்த அவர்களுடைய ஆர்வம் எனக்கு மிகப் பெரிய அளவில் ஊக்கம் அளித்தது. தற்போதைய கால கட்டத்தில் நான் இரு வழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்கிறேன்.  

எம் எம்: உங்கள் மொழிபெயர்ப்புச் செயல்பாட்டைச் சற்று விவரிக்க முடியுமா?

மிங் டி: ஒரு கவிஞர் ஆழமான, அதிநவீன மட்டத்தில் எதைக் கூற விழைகிறார் என்பதைக் கண்டறியவே நான் முயற்சிக்கிறேன். எங்கு, எப்பொழுது கவிதை கட்டமைக்கப்பட்டது, கவிஞரின் சிந்தனை வழியாகச் சென்றது என்ன, அவர் யாரிடம் பேச விரும்புகிறார் மற்றும் அவர் எவ்வாறு பேசினார் என்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். நான் அந்தச் சூழலுக்குள் என்னைப் புகுத்தி, செயல்படத் துவங்குகிறேன்... திரும்பத் திரும்பப் பார்வையிடல் முக்கியமானது. கவிதைகளுக்கு அப்பாற்பட்டு வாசிப்பதும் முக்கியமானது. கவிஞர்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள நேர்காணல்கள், மதிப்புரைகள் (அல்லது சுயசரிதைகள்) போன்ற குறிப்புகளை நான் தேடுகிறேன். இளைய கவித் தொடர்கள் வழியாக தனிப்பட்ட முறையில் அளவளாவுதல் மற்றும் அவாதானித்தல்களிலிருந்து நான் எழுதுகிறேன் – ஒவ்வொரு கவிதைத் தொகுப்பும் சில குறிப்புரைகளைப் பெற்றுள்ளன. எனவே சீனாவில் வாசிப்பவர் மேலும் அதிகமாக அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.         

எம் எம்: இந்தச் செயல்பாட்டில் மற்றவர்களுடன் இணைவதில் உங்களுக்கு விருப்பமா?

மிங் டி: சீனாவிலிருந்து ஆங்கிலத்திற்கு, முழுமையாக ஆம் என்று சொல்வேன். ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்கு, இல்லை. சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் பொழுது, ஆங்கிலம் பேசும் கவிஞர்களுடன் செயல்புரிவதையும் சீனக் கவிதைகளின் பின்புலமாக இருக்கும் அழகியல் மற்றும் உந்துசக்தியை விவரிப்பதையும் உற்சாகமாக அனுபவிக்கிறேன். அவர்கள் எனது வரைவை அதிக உரையாடல்ரீதியான ஆங்கிலமாக உருவாக்குவதில் உதவுகின்றனர். இந்தச் செயல்பாட்டில் செய்திப் பரிமாற்றம் முக்கியமானது. 100 கவிதைகளுக்கும் அதிகமாக நான் நீல் ஐட்கென்னுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். ஒரு கவிதையை மேம்படுத்துவது இவ்வாறாக இருந்தது: நான் பேசுவேன், பேசுவேன், பேசிக் கொண்டே இருப்பேன், “மிகச் சிறந்தது” என அவர் கூறும் வரை ஒரு வரியின் அர்த்தத்தைப் பல வித்தியாசமான முறைகளில் பேசுவேன். பிறகு அவர் வாசிப்பார், நான் கவனித்துக் கொண்டிருப்பேன். நான் “அதுதான் சரி” எனக் கூறும் வரை அவர் பல்வேறு பதிப்புகளை வாசிப்பார். ஒரு வரியை வழங்க பல வழிகள் இருக்கின்றன. சீன மொழியின் உபாயங்களையும் கவிதையில் உள்ளடங்கிய கலாச்சாரக் குறிப்புகளையும் முடிவில்லாமல் ஆராய முடியும்.

சீன மொழிக்கு மொழியாக்கம் செய்யும் பொழுது, அதன் ஆசிரியர்களிடம் இணைந்து ஒத்துழைக்க நான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு, ஜான் வேக்னர், நிக்கோலா மாட்ஸிரவ் மற்றும் சொனாட்டா பாலியுலிடே ஆகியோரை அவர்களுடைய மொழியிலிருந்து (ஜெர்மன், மசிடோனியன், லித்துவேனியன்) ஆங்கிலத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி இலக்கிய மொழிபெயர்ப்பை வழங்கவும், உருவவியல்ரீதியான, உரையாடல்ரீதியான அம்சங்களை எனக்கு விவரித்துக் கூறவும் நான் கேட்டுக் கொண்டேன். சுருங்கக் கூறும் ஆங்கில மொழிபெயர்ப்பு மீது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை இல்லை. அவர்கள் தங்கள் தாய்மொழியில் தங்கள் கவிதைகளை எவ்வாறு கட்டமைக்கின்றனர் என்பதைக் காண விழைகிறேன்.

எம் எம்: எந்தக் கவிஞர்கள் அல்லது கவிதைகள் மொழிபெயர்க்க உகந்தவை என எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

மிங் டி: சிறந்தவைகள். வெகுவாக அறியப்படாத சிறந்தவைகள். இதுவரை மொழிபெயர்க்கப்படாத சிறந்தவைகள்.   

நான் பிரபலமானவர்களின் படைப்புகளையே மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறேன். ஆனால், சமீப வருடங்களில் மார்கோ போக்கார், வல்ஸினா மோர்ட், நிக்கோலா மாட்ஸிரவ், ஜான் வேக்னர், சொன்னாட்டா பாலியுலிடே, இவான் ஹெர்ஸெக், டோமிகா பஜ்ஸிக், டேமிர் சொடான், ராம்ஸே நாஸர், போன்றோர் உட்பட சுமார் 40 பேர் என இளைய கவிஞர்களின் முதல் சீன மொழிபெயர்ப்பாளராக இருக்கவே நான் விரும்புகிறேன். சிலரை நான் சந்தித்து இருக்கிறேன். சிலர் பிற கவிஞர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். சிலரை நான் பத்திரிக்கைகள் மூலமாக அறிந்திருக்கிறேன். எனக்கு “புகழ்” மீது ஆர்வம் கிடையாது. பன்முக பாணியிலான ஆர்வத்தைத் தூண்டும் கவிதைகளை மட்டும் நான் தேர்ந்தெடுக்கிறேன். நான் முதன் முதலாக ஜான் வேக்னரையும் ஆலிஸ் ஸ்டெகரையும் மொழிபெயர்த்த பொழுது, அவர்கள் தங்கள் நாடுகளிலும் ஐரோப்பாவிலும் நன்கு அறியப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியாது.

சீனக் கவிஞர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது போல, ஏற்கனவே அறிமுகமானவற்றிலிருந்து வித்தியாசமான, மெய்யான, ஆர்வமூட்டும் உள்ளீட்டை உருவாக்கியவாறு தற்போது உத்வேகத்துடன் எழுதி வரும் கவிஞர்களையே நான் தேர்வு செய்கிறேன். அவற்றில் சில முன்னரே மொழிபெயர்க்கப்பட்டவை. ஜியாங் ஹாவோ, ஜியாங் டாவோ, ஹு ஹுடாங், லூ யூயீ, லூ டியான், லி லி போன்ற அவர்களுடைய வழக்கத்திற்கு மாறான தரத்தை வெளியே கொண்டு வர நான் முயற்சிக்கிறேன். லின் ஜி, பான் ஜிஸென், ஜியாங் லி, க்யூ க்யுக்ஸியான் போன்ற சிலருடைய படைப்புகள் இதுவரை மொழிபெயர்க்கப்படாதவை. உண்மையில், ஜியோ கையூ, ஜி சுவான், ஹான் போ, ஜி யாப்பிங், சன் லீ, லான் லான், ஸென் ஜியோக்யாங் போன்ற பிற சிறந்த கவிஞர்களும் இருக்கின்றனர். பிற மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுடைய படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர்.   

எந்தக் கவிதைகளை மொழிபெயர்ப்பது? அதற்கான முடிவு பரந்துபட்ட வாசிப்பை மேற்கொள்ளத் தூண்டுகிறது. உதாரணத்திற்கு, Book of Cranes-ஐ தொகுத்து, மொழிபெயர்க்க துவங்குவதற்கு முன், நான் அந்த எழுத்தாளரின் ஏழு வெளியிடப்பட்ட நூல்களையும் இரண்டு வெளியிடப்படாத நூல்களையும் வாசித்தேன். கவித்துவ மேம்பாட்டின் உருவாக்க நிலைகளை காண்பிப்பதற்காக நான் வித்தியாசமான இரண்டு காலகட்ட கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்தேன். கடந்த வருடம் தைவானில் வெளியிடப்பட்ட ”Missed Time”-உடன் அந்த ஆசிரியரின் மூன்று கவிதை நூல்களிலிருந்து எட்டுக் கவிதைகளைத் தேர்வு செய்தேன். அந்தத் தேர்வு ஆசிரியரின் ஒட்டுமொத்த அழகியலை அந்தக் கவிதை எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. தேர்வு மற்றும் மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் அந்த ஆசிரியருடன் நானும் செயல்பட்டேன். நான் ஒரு முழுத் தொகுப்பை மொழிபெயர்ப்பு செய்திருந்தால், தேர்வு பற்றி எந்தக் கேள்வியும் இருக்காது. ஆயினும் பெரும்பாலான கவிஞர்களுக்காக நான் ஒரு சில கவிதைகளை மட்டும் மொழிபெயர்ப்பு செய்தேன். அந்தக் கவிதைகளின் வரையறை என்னவெனில், ஆர்வமூட்டும் சப்தமும் இலக்கு மொழியில் அது புதிது என்பதும்தான். வழக்கத்திற்கு மாறான கற்பனைகளும் வெளிப்பாடுகளும் எனக்குப் பிடிக்கும்.          

MM: நவீன காலச் சீனாவில் கலாச்சாரப் புரட்சி மற்றும் பிறவற்றைப் போல பல அரசியல் இயக்கங்கள் இருந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் ஏதேனும் எந்த விதத்திலாவது உங்கள் எழுத்தைப் பாதித்தனவா?

மிங் டி: கலாச்சாரப் புரட்சி (1966-1976) எனது வளர்ச்சி மற்றும் வருங்காலத்தையும் பாதித்தது. 1989 புரட்சி எனது எழுத்தின் மீது மிக அதிகமாகத் தாக்கம் செலுத்தியது. ”எதிர்-வலதுசாரி” இயக்கம் (1957-1958) போன்ற பிற நிகழ்வுகள் மறைமுகமாக என்னைப் பாதித்தன. எனது அன்னையும் சகோதரியும் அதனால் மிக ஆழமாக நிலைகுலைந்து போனார்கள். போரும் 1949 நிகழ்வும் எனது பாட்டியை என்னிடமிருந்து பிரித்தது. அவர் இறுதிவரை அதிலிருந்து மீளவில்லை. எனது தாத்தாவின் பழைய புகைப்படத் தொகுப்பு என்னிடம் உள்ளது. அது ஒரு தீயக் கனவு போல என்னிடம் பேசியது – அவரை அவருடைய கல்லறையில் தான் நான் பார்த்தேன். எனது சகோதரி ஐந்து வயதில் சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட போது அவள் சீன மொழி பேசவில்லை. அவள் எங்கள் தந்தைக்கு எதிராக Red Guard-ல் இணைந்து விட்டாள். அவள் அவரை ஒரு எதிரி போலப் பாவித்தாள்... அரசியல் அவலங்கள் ஆரம்ப கால கட்டங்களிலேயே என்னை மிகவும் பாதித்தன. ஆனால் உணர்ச்சிகளை கவிதையில் ஒரு ஆற்றலாக மாற்றுவது என்பது மிகக் கடினம் – நான் நடுத்தர வயதை அடையும் வரை எனக்கு அவ்வாறு செய்வதற்கு மன உறுதி இல்லை – நான் மிக மெதுவாக வளர்ந்தேன், எழுத்தில் வெகு தாமதமாக முதிர்ச்சி அடைந்தேன். எனக்கு என் ஆரம்ப கால எழுத்துகள் பிடிக்கவில்லை. அதே போல சீனக் கவிஞர்களின் ஆரம்ப காலப் படைப்புகளும் எனக்குப் பிடிக்கவில்லை. திடீர் உணர்ச்சி வெடிப்பு கலைத்திறத்துடன் ஒன்றிணையும் பொழுது மட்டும் சிறந்தது. சமீப வருடங்களில் அரசியல் நிகழ்வுகளுக்கு அப்பால் காண முயற்சிக்கிறேன், மேலும் அதிகமாக எனது அகத்தினுள் காண முயற்சிக்கிறேன், பழங்கால வரலாறு மற்றும் புராணங்களினூடாகக் காண முயற்சிக்கிறேன் – நவீன வரலாறு எனக்கு உண்மையான அர்த்தத்தை உள்வாங்குவதற்கு மிகத் தொலைவு, அதே போல உண்மையான சாராம்சத்தைப் பெறுவதற்கு மிக நெருக்கமானது. சீனா உலக வரைபடத்தில் ஒரே ஒரு புள்ளி. 1989 என்பது மிக மோசமான துயர வருடமாக இருந்தாலும், மானுட நாட்காட்டியில் ஒரே ஒரு வருடம். எழுதுவதற்கு நிறைய உள்ளது, அது முடிவற்றது. ஆயினும் 1989 எனது நினைவுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் அதைத் தடுக்க நினைக்கிறேன். வரலாற்றைவிட மிகப் பெரிதாக ஏதோ இருக்கிறது. சீனாவில் எழுதும் ஒவ்வொருவரும் அதைச் சார்ந்திருந்தாலும் நான் அந்த “1989 தலைமுறை” என்ற பதத்தை எதிர்க்கிறேன். சீனாவில் உள்ள அரூபக் கவிஞர்கள் போன்ற சிலர் 1989-ல் முதிர்ச்சி பெற்ற கவிஞர்கள், ஆனால் இன்னமும் அதன் தாக்கத்தால் நிலைகுலைந்து போகின்றனர். என்னைப் போன்ற சிலர் கல்லூரி மாணவர்கள். இன்று சீனாவில் உள்ள இளைய கவிஞர்கள் சிலர் 1989-ல் பிறந்தவர்கள், அவர்களுக்கு 1989 குறித்த எந்த அடையாளமும் தெரியாது. அந்த வசதியான பதத்தை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால், கவிதை என்பது எல்லைகள், பெயர்கள், பள்ளிகள், முத்திரைகள், குறிப்பாக அரசியல் தொடர்பான பதங்களுக்கு அப்பாற்பட்டது. நாம் எந்த அளவு அரசியல்ரீதியாக இருக்கிறோமோ அந்த அளவு நமது கவிதை சிக்கலானதாக இருக்க வேண்டும்- அரசியல் பின்புலம் கவிதை மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது, அது ஒரு அடிப்படை ஆற்றலை, ஒரு புதிரை, ஏதாவது ஒன்றிற்கான பாலத்தைக் கட்டமைகிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒரு வரையறைக்கு உட்பட்டது. சீனாவில் அரசியல் இயக்கங்கள் எனது எழுத்தை எவ்வாறு “பாதித்தது” என நீங்கள் கேட்டால், அது எனது எழுத்தில் ஒரு பலவீனத்தைக் காண வைக்கிறது. அது மேலும் பயனுள்ளதாக எழுதத் தூண்டுகிறது. உண்மையில், அரசியல் கவிதை மானுட வாழ்வில் வெளிப்படையானதாக இல்லாத வரை, நான் அரசியல் கவிதைகளை வெறுக்கிறேன்.              

MM: மொழிபெயர்ப்புச் செயல்பாடு உங்கள் தனிப்பட்ட கவிதை எழுதும் போக்கைப் பாதித்ததா?

மிங் டி: உண்மையில் இல்லை, ஒரு வேளை உள்ளுணர்வு சார்ந்து அவ்வாறு இருக்கலாம். நான் முதலில் துவங்கிய பொழுது, எமிலி டிக்கன்ஸன், எட்ணா செய்ண்ட். வின்செண்ட் மில்லே, மூர், பிஸப், ருத் ஸ்டோன், முதலியவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தேன். அவர்கள் கவிஞர் என்ற வகையில் என்மீது தாக்கம் செலுத்தினார்கள். ஆனால் அது நேரடியாக என் எழுத்தில் இல்லை. நான் பெண் எழுத்தாளர்களின் தாக்கத்தை எதிர்க்கிறேன், அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. எனது பெண்மை தோய்ந்த உதிரத்தில் ஒரு ஆணின் ஆற்றல் இருக்கிறது, அது குரல் எழுப்ப விரும்புகிறது. தாமஸ் ஹார்டி மற்றும் டி.எச்.லாரன்ஸ் ஆகியோரால் நான் அதிகத் தாக்கம் பெற்றதாக நினைக்கிறேன். டி.எஸ்.எலியட் மற்றும் டபிள்யூ.எச்.ஆடன் போல அவர்களுக்குள் உறைந்திருக்கும் உணர்வெழுச்சி மற்றும் காயம்படத்தக்க தன்மை என்மீது தாக்கம் செலுத்தியது. ஆண் எழுத்தாளர்களுக்குள் இருக்கும் நுட்பமான பெண்மை ஆற்றல் என்னைக் கவர்கிறது, என் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. சீனக் கவி மற்றும் விமர்சகர் ஸாங் டி கூறுகிறார்: “கவிதையை வாசிக்கும் ஒரு ஆணுக்குள் ஒரு பெண் இருக்கிறார். கவிதையை வாசிக்கும் ஒரு பெண்ணுக்குள் மற்றொரு பெண் இருக்கிறார்.” நான் ஏற்கிறேன் மற்றும் மறுக்கிறேன். எனக்குள் இருப்பது ஒரு ஆண், அவர் இந்தக் கவிதையை எழுதுகிறார் என இன்று நான் கூறுவேன். எனக்குள் இருப்பது வேறொரு பெண், அவர் இந்தக் கவிதையை வாசிக்கிறார் (நான் வேறொரு நேர்காணலில் வேறு விதமாகக் கூறியிருந்தாலும்). மொழிபெயர்ப்பு என வரும் பொழுது, எனக்குள் இருப்பது ஒரு பெண், அவர் மூல கவிதையை வாசிக்கிறார். எனக்குள் இருப்பது ஒரு ஆண், அவர் இதை மொழிபெயர்க்கிறார்- இரண்டு ஆற்றல்களும் மொழிபெயர்ப்பில் செயல்படுகின்றன. அவர்கள் ஒத்திசைவாக இணைந்து செயல்படுகின்றனர். ஆயினும் ஒருவரை ஒருவர் அடியாழத்தில் எதிர்க்கின்றனர்- எழுதுதல் வாசித்தலின் தாக்கத்தை எதிர்க்க முனைகிறது. அதாவது மொழிபெயர்ப்பில் எனது சுய குரலை நான் முன்மொழியும் பொழுது மொழிபெயர்ப்புச் செயல்பாடு எனது எழுத்தைப் பாதிப்பதில்லை. ஆனால், மொழிபெயர்ப்பில் நான் எனது தனிப்பட்ட குரலை மறைக்கிறேன், நான் ஆசிரியரின் குரலை பாவனை செய்கிறேன் – ஆண் அல்லது பெண். எனவே மொழிபெயர்ப்புச் செயல்பாடு எனது எழுத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. எனினும் கவிதை எழுதுதல் என்பது கருப்பு அல்லது வெண்மை, ஆண் அல்லது பெண் போல எளிதானது அல்ல. கவிதையின் குரல் முழு நிறக்கற்றை போல, முழுமையான ஒளியலை போல வளமையானதும் சிக்கலானதும்கூட, மொழிபெயர்ப்பாளர்கள் கடலில் பயணித்து, அலைகளை எதிர்கொண்டு, அவற்றைக் கடக்க வேண்டும். மொழிபெயர்ப்பு பார்வையை, தொலைநோக்கை, எல்லைகளை விரிவுபடுத்துகிறது- இப்படித்தான் எனது தனிப்பட்ட கவிதைப் படைப்பு மீது அது தாக்கம் செலுத்துகிறது.     

MM: உங்கள் இருமொழி இலக்கிய இதழ் Poetry East West பற்றிக் கூற முடியுமா? எந்த வகையான கவிதைகளை அதில் நீங்கள் வெளியிடுகிறீர்கள்?

மிங் டி: Poetry East West சுதந்திரமான ஒரு சிறு பத்திரிகை. அது பிற மொழிகளிலிருந்து சீன மொழிக்கும் சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் (சாத்தியம் என்றால் பிற மொழிகளுக்கும்) கவிதைகளைக் குறுக்கு-மொழிபெயர்ப்பு செய்வதன் மீது கவனம் செலுத்துகிறது. ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் கவிஞர்கள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்பில் முழுமையாக ஈடுபடும் மொழிபெயர்ப்பாளர்கள். ஸாங் டி பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் போதிக்கிறார். அவர் ரில்கே மற்றும் சமகாலக் கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். மாய் மாங் (ஹ்வாங் யீபிங்) டிவோ ட்வோ-வின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய பெயர் 2010 Neustadt International Prize for Literature-க்காகப் பரிந்துரை செய்யப்பட்டது. தோமாஸ் ஸாலாமன் மற்றும் ஜான் ஆஸ்பெர்ரி கவிதைகளை மொழிபெயர்த்தவர் யாங் ஜியாபின். நீல் ஐட்கென் பல சீனக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். வாலஸ் ஸ்டீவென்ஸ் மற்றும் ஹார்ட் கிரேன் போன்றோரின் கவிதைகளை மொழிபெயர்த்தவர் வாங் ஆவோ. ஃபான் ஜிங்குவா (சிங்கப்பூர்), விஸ்லாவா ஸிம்போர்ஸ்காவை மொழிபெயர்த்த ஸென் லீ (தைவான்), யாங் லியான் (லண்டன்), பால் ஸெலானை மொழிபெயர்த்த மெங் மிங் (பாரீஸ்), தோமஸ் ட்ரேன்ஸ்ட்ரோமரை மொழிபெயர்த்த லீ லீ (ஸ்வீடன்) என உலகின் பல பாகங்களிலிருந்தும் பங்களிப்பு செய்கின்றனர். பிற நாடுகளில் உள்ள சில அற்புதமானா கவிஞர்கள் சீனக் கவிதைகளை தமது மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்: ருப்ரெக்ட் மேயர் (ஜெர்மனி), ரதி ஷக்ஸேனா மற்றும் சுதீப் சென் (இந்தியா), மரியம் ஆலா-அம்ஜாடி (ஈரான்), ஃப்ரான்கோயிஸ் ராய் (மெக்ஸிக்கோ), போயல் ஸென்ஜவேர் (ஸ்வீடன்), டோஸான் அல்கான் (துருக்கி), அன்னா லம்பர்டோ மற்றும் அன்னிலிஸா அடோலரட்டோ (இத்தாலி), டாமிர் சோடன் மற்றும் மிரோஸ்லாவ் கிரீன் (குரோசியா) போன்றவர்கள்.     

நாங்கள் எவற்றை வெளியிடுகிறோம்? கவிதை சார்ந்த அனைத்தும்: உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நன்கு அறியப்பட்ட, அறியப்படாத கவிஞர்களின் கவிதைகள், மதிப்புரைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் கவிதை வாசிப்பு (சீன செவ்வியல் இலக்கியத்தின் உத்வேக வகை). எந்த வகையான கவிதைகள்? சுவாரஸ்யமான அனைத்தும். இதழின் சிறப்பம்சம் “each-other-ness”. இது பல்வேறு வழிகளில் சாதிக்கப்படுகிறது. முதன்மையான நோக்கம் பரந்துபட்ட புரிதலை வளர்ப்பது மற்றும் கவித்துவ உரையாடலை விரிவுபடுத்துவது. “Each-other” என்பது சீனச் சூழலில் விலக்குதலே இல்லாமல் மிகவும் விரிவானது.   

தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...