Saturday, September 1, 2018

நவீன ஜப்பானியக் கவிதை: ஜூடி ஹாலப்ஸ்கி நேர்காணல்
ஜப்பானியப் பெண் கவிஞரான ஜூடி ஹாலப்ஸ்கியின் கவிதைத் தொகுப்பு Sky=Empty (New Issues, 2010) மார்வின் பெல்லால் விருதுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் தொகுப்பு கலிபோர்னியா புத்தக விருதின் இறுதிப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. டோக்கியோ கவிஞர்களுடன் இணைந்து Eki Mae எனும் இருமொழி கவிதை இதழை நடத்தி வருகிறார் ஹாலப்ஸ்கி. சான் பிரான்சிஸ்கோவின் ஓஸன் பீச்சில் வசித்து வரும் இவர் கலிபோர்னியா டொமினிக்கன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். மஸாஷி முஸா நிகழ்த்திய நேர்காணல் இது.
மஸாஷி முஸா: சமகால ஜப்பானியக் கவிஞர்களில் சிறந்தவராக யாரைக் கருதுகிறீர்கள்?
ஜூடி ஹாலப்ஸ்கி: ஆங்கிலம் பேசும் வாசகரின் மிகப் பெரிய போராட்டம் என்னவெனில், மொழிபெயர்ப்பாக மாற்றப்படும் புதிய எழுத்தின் ஒரு சிறு பகுதி. யுகா ஸூக்காகோஷியின் படைப்புகளை நான் அதிகமாகப் பாராட்டியும் மொழிபெயர்த்தும் இருக்கிறேன். அவர் கிளர்ச்சியூட்டும் படைப்புகளைத் தந்துள்ளார். அவை சர்ரியலிசம் உட்பட நவீன, சமகாலக் கவிதையின் பன்முக இழைகளால் தாக்கம் பெற்றவை. டகாகோ அராய் மற்றும் ஹிரோமி இடோவின் கவிதைகளை ஜெஃப்ரி ஆஞ்சல்ஸ் அற்புதமாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஸவாகோ நகாயாஸூ மற்றும் எரிக் ஸெல்லாந்த் ஆகியோர் மொழிபெயர்ப்பில் நவீன ஜப்பானியக் கவிதையைத் தொகுத்துள்ளனர். கவிஞர் ஆலன் போட்ஸ்ஃபோர்ட் Poetry Kanto இருமொழி கவிதை இதழின் ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.  இவை சமகால ஜாப்பானியக் கவிதை துவங்கப்பட்ட ஒரு சில நிகழ்வுகள்.

MM: உங்கள் பூர்வீகம் கனடா. ஐந்து வருடங்களாக ஜப்பானில் வசிக்கிறீர்கள். உங்களை ஜப்பானுக்கு அழைத்து வந்தது எது? நீங்கள் டோக்கியோவில் படித்த கவிதையின் விவரத்தை சற்றுக் கூற முடியுமா?

ஜூடி: நான் பட்டப்படிப்பிற்காக கலிபோர்னியா சென்றேன். ஜேன் ஹிர்ஸ்ஃபீல்ட் மற்றும் ராபர்ட் ஹஸ் ஆகியோரின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவருகளுடைய படைப்புகளை வடிவமைக்கும் கவிதை வடிவங்களையும் அழகியலையும் மேலும் அதிகமாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஜேன் ஹிர்ஸ்ஃபீல்ட்டின் Ink Dark Moon “waka” அல்லது தீவிரக் கவிதையின் மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது. இவை குறுகிய கவிதைகள், 5-7-5-7-7 மாத்திரை அளவுகளைக் கொண்டவை. அவை பொதுவாக உள்ளீட்டுப் பொருளை மேம்படுத்துவது பற்றி பேசுகின்றன. பல கவிதைகள் ஒரு காதலனைச் சந்திக்கக் காத்திருக்கும் ஒரு காதலியின் விருப்பத்தைப் பற்றியவை.   

ரெங்கா அல்லது இணைப்புக் கவிதை வாகா வடிவத்தை ஒருங்கிணைக்கப்பட்ட கவிதைச் செயல்பாட்டினுள் விரிவுபடுத்துகிறது. கவிஞர்கள் 5-7-5 அல்லது 7-7 இணைப்புகளை எழுதுவதில் முனைப்பு காட்ட வேண்டும். அந்தக் கவிதை நூற்றுக்கணக்கான கவிதைகளாக அதிகரிப்பது சாத்தியம். முதல் கவிதை “hokku”  என அழைக்கப்படுகிறது. அது 5-7-5 மீட்டர் அளவுகளில் தொகுக்கப்படுகிறது. இந்த hokku சுயமாக ஒரு கவிதை வடிவமாக மேம்பாடு காண்கிறது. அது இப்போது ஹைக்கூ என அழைக்கப்படுகிறது. ஆரம்ப கால ஹைக்கூ வட்டார மொழியையும் பொதுவான படிமங்களையும் பயன்படுத்தி தீவிரக் கவிதைகளில் வேடிக்கைகளை மட்டும் திணித்தது. பாஷோ ஹைக்கூவை வெளிப்படுத்தி, வழக்கில் உள்ள மொழியையும் தினசரிப் படிமங்களையும் பராமரித்தபடி கவித்துவ நடைமுறையை ஒரு வடிவத்திற்குக் கொண்டு வந்தார். ஹஸ்ஸின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு The Essential Haiku பாஷோ, பூஷன் மற்றும் ஐஸ்ஸாவின் ஹைக்கூக்களை உள்ளடக்கியது. இந்த மொழிபெயர்ப்புகள் ஜப்பானிய இலக்கியத்தைப் படிப்பதற்கு எனக்கு உள்ளுயிர்ப்பாக இருந்தன.     

உண்மையில் நான் டோக்கியோவில் வசிக்கத் துவங்கியவுடன் சமகாலக் கவிதைகளில் ஈடுபடத் துவங்க் விட்டேன். கவிஞர்கள் தமது கவிதை நூலை ஒரு இரவில் வாசித்துக் காட்டும் வாசிப்புத் தொடர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். ஹைக்கூ நிகழ்வுகளுக்கும் சென்று குழு காட்சி அரங்கில் பங்கு பெற்றேன். அங்குதான் நாங்கள் ஒன்றுகூடி ren-shi (வசன கவிதைப் பதிப்பு) வடிவங்களைத் தொகுத்தோம். அங்கு டோக்கியோ கவிஞர்களைச் சந்தித்தேன். நாங்கள் Eki Mae  என அழைக்கப்படும் இருமொழி இதழையும் துவங்கினோம்.

MM: நீங்கள் ஜப்பானியக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். எந்தக் கவிஞர் அல்லது கவிதை மொழிபெயர்க்க வேண்டும் என எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

ஜூடி: கவிதைகளைச் சரியான முறையில் அணுகுவதற்காகவே நான் மொழிபெயர்ப்பின் அருகில் ஈர்க்கப்பட்டேன். யுகா மற்றும் அகுட்ஸூ அயூமி என இரண்டு சமகாலக் கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தேன். எனது சில ஹைக்கூ கவிதைகளையும் கூட மொழிபெயர்த்தேன். நான் ஆங்கிலத்தில் அறியாத சில ஜப்பானியக் கவிதைகளின் தொடர்புகள் மூலமாகவே பெரும்பாலும் நான் மொழிபெயர்ப்பினுள் நுழைந்தேன். ஏனென்றால், அந்தக் கவிதைகள் மொழிபெயர்க்கப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது ஜப்பானியக் கவிதைகள் மீது எனக்கு ஏற்பட்ட அனுபவம் தற்போதைய மொழிபெயர்ப்புகளுடன் வேறுபட்டிருக்கலாம்.    

MM: பிற மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புப் பிரதிகளில் இல்லாத குறிப்பிடத்தக்க சவால்கள் ஜப்பானியக் கவிதைகளை மொழிபெயர்ப்பதில் இருக்கின்றனவா?

ஜூடி: மொழிபெயர்ப்பு என்பது எப்பொழுதும் கடினமானது. எழுதப்பட்ட மொழியும் கலாச்சார அறிவும் சொற்களுக்கு நாம் எவ்வாறு அர்த்தங்களை ஒதுக்குகிறோம் என்பதை வடிவமைக்கின்றன. சிலர் அறிவு எனக் கருதுவது சிலருக்கு வேறு விதமாக இருக்கலாம். பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில், ஜப்பானிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கும் சவால்களைப் பொறுத்தவரை, மொழிகளுக்கு இடையில் பலவிதமான இடைவெளிகள் இருப்பதாக நான் கருதுகிறேன். மொழியியல் பொதுமை (இலத்தீன் அல்லது ஜெர்மானிய வேர்கள் போல) அல்லது பகிர்ந்து கொள்ளப்பட்ட கலாச்சார அறிவின் பண்புகள் (ஜூடோ-கிறிஸ்த்துவப் பாரம்பரியம் போல) அவை பகிர்ந்து கொள்ளப்படும் பொழுது இரண்டு மொழிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி பாடம் கற்பிக்கிறது. நான் ஜப்பானியக் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்காக மட்டும் போராடவில்லை, அதன் தனித்துவச் சட்டகத்தை ஆங்கிலத்தில் மறு-உருவாக்கம் செய்யவும் போராடுகிறேன். உதாரணத்திற்கு, யுகாவின் படைப்புகளில் திரும்பத் திரும்ப வரும் படிமம் நெல் வயல், குறிப்பாக, ஒரு நெல் வயலில் உள்ள நீரின் மீதுள்ள பிரதிபலிப்புகள். நான் ‘நெல் வயல்’ பற்றி எழுதும் பொழுது, வட அமெரிக்காவில் உள்ள வாசகர் பிரகாசமான நாளில் ஆகாயத்தைப் பிரதிபலிக்கும் நிலைத்த நீருடன் ஒரு வயலின் படிமத்தைப் பெற முடியுமா? எனக்குத் தெரியாது. அது எனக்கு ஒரு உடனடிப் படிமம் அல்ல.     

MM: நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறீர்களா?

ஜூடி: ஒரு ஒருங்கிணைப்புச் செயல்பாட்டில் நானும் யுகாவும் இணைந்து செயல்பட்டோம். பல்வேறு வகையான பார்வைக் கோணங்களை நாங்கள் கட்டமைத்தோம். “Jonathan’s” (இலவச மது அரங்கத்துடன் கூடியது) என அழைக்கப்படும் இரவு விருந்தில் பல மணி நேரங்களைச் செலவிட்டு, ஒரு மொழிபெயர்ப்பில் ஆயிரக்கணக்கான சாத்தியக்கூறுகளைச் சென்றடைந்தோம். அது ஒரு நம்பிக்கைச் செயல்பாடும் கூட, பெரும்பாலும் கைகளைக் கோர்த்தபடி சுழலுதல் போல. குறைபாடு இல்லாத புதிய கவிதையை உருவாக்க நாங்கள் இருவரும் சற்று சமரசம் கொண்டு, முக்கியத்துவம் தர வேண்டியிருந்தது.   

MM: உங்கள் மொழிபெயர்ப்புச் செயல்பாடு எப்படி இருக்கும்?

ஜூடி: யுகாவின் கவிதைகளை மொழிபெயர்க்க, கவிதைகளைப் படிப்பதில் துவங்கி, எந்தக் கவிதை மொழிபெயர்ப்பில் இணக்கமாக இருக்கும் என்பதைக் காண வேண்டியிருந்தது. நான் யுகாவுடன் இணைந்து செயலாற்றுகையில், எனக்குப் பிடித்த வகையில் அந்தக் கவிதைகளை நான் வாசித்துப் பார்த்து, அதனுடன் எனது தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டேன். பின்னர் இலக்கியப்பூர்வமாகச் சொற்களையும் வரிகளின் பாகங்களையும் மொழிபெயர்ப்பதன் மூலம் கவிதையின் அழகை உருவாக்குவேன். அந்த அழகை மேம்படுத்த நான் பலவிதமான அகராதிகளைப் பயன்படுத்துகிறேன். பின்னர் கவிதையின் உணர்வுப்பூர்வமான புரிதலிலிருந்து மொழிபெயர்ப்பு வரிகளை எழுதத் துவங்குவேன்.  

ஜப்பானிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பதில் உள்ள போராட்டங்களில் ஒன்று, வரிகளையும் சொற்களையும் அதன் ஒழுங்கில் நேர்த்திப்படுத்த முயல்வதுதான். ஆதாரக் கவிதையின் ஒழுங்கில் மறு-உருவாக்கம் செய்வது தடைப்பட்ட இலக்கண ஓட்டத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குச் சற்று இடையூறு விளைவிக்கக்கூடியது. 

மொழிபெயர்ப்பின் வரைவுக்குப் பின், நான் அதை யுகாவுடன் பகிர்ந்து கொள்வேன். வரி இடைவெளி, சொல் தேர்வு மற்றும் நிறுத்தற்குறிகள் பற்றி முன்னும் பின்னும் செல்லக்கூடிய நீண்ட ஒருங்கிணைப்புச் செயல்பாட்டைத் துவக்குவோம். அவர் வழக்கமாக என்னைக் காட்டிலும் அதிக இலக்கிய மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை தருவார். குறிப்பிட்ட இலக்கிய அர்த்தத்தைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலத்தில் உள்ள மூல கவிதையின் தொடர் விளைவை உருவாக்குவதில் நான் அதிகமாக பதட்டம் கொள்வேன்.   

MM: பிற கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது உங்கள் தனிப்பட்ட கவிதைகளை எழுதுவதைப் பாதித்துள்ளதா?

ஜூடி: கவிதை எழுதுவதும் ஒரு மொழியைப் பயில்வதும் எனது செயல்பாட்டில் பின்னிப் பிணைந்தது. அங்கு தொடர்ச்சியாக அர்த்தங்களை உருவாக்குவதும், அர்த்தச் சிதிலங்களும், தோல்வியுற்ற சமன்பாடுகளுக்கான தேடலும் இருக்கின்றன. எனது ஹைகூ மொழிபெயர்ப்பிற்காக, எனது செயல்பாடு பொதுவானதாகவும் அவ்வப்போது ஒரு நீண்ட கவிதையில் பொதிந்துள்ள ஒரு குறிப்பிட்ட ஹைக்கூவின் சாத்தியமுள்ள பன்முக மொழிபெயர்ப்பின் விளைவாகவும் இருக்கும். மொழிபெயர்ப்பில் ஒரு முக்கியமான தளம் இருக்கிறது. நான் மொழிபெயர்க்க விரும்பும் கவிதையை அந்தத் தளத்தில் உள்வயப்படுத்திக் கொள்வேன். அங்கிருந்து, ஆதாரக் கவிதையின் வடிவத்தினுள் என்னால் மொழிபெயர்க்க முடிகிறது.  சில வேளைகளில், அந்தக் கவிதையை ஒரு புதிய வடிவத்தில் அதாவது எனது தனிப்பட்ட கவிதையில் என்னால் படைக்க முடிந்ததைப் படைக்க விரும்புவேன். பெரும்பாலும், நான் இதை பாஷோவின் ஹைக்கூ கவிதைகளில் அதிகமாக மேற்கொள்கிறேன். எனது கவிதை “A Breaking Word,” பாஷோவின் தவளைக் குட்டை ஹைக்கூவை மொழிபெயர்க்கிறது. மூன்று விதமான ஹைக்கூ மொழிபெயர்ப்புகளிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன் (ராபர்ட் ஹஸ், ஆலன் வாட்ஸ் மற்றும் ஆலன் கின்ஸ்பெர்க்). கவிதையில் உள்ள வரிகள் ஹைக்கூவை மொழிபெயர்க்கக் கடினமான சில வழிகளை விவரிக்கின்றன. எனவே, எனது புதிதாக உருவாக்கப்பட்ட கவிதை ஒரு வகையில் பாஷோவின் ஹைக்கூவைத் திறந்து, ஆங்கிலம் பேசும் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பின் சில சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.

தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...