Tuesday, September 25, 2018

தாகத்துடன் இருத்தல்

ஆலிசியா ஆஸ்ட்ரிக்கர்


பழையது அறிவார்த்தமானது என்பதல்ல இது
ஆனால் அறிவுத் தாகம் எங்களுக்கும் உண்டு

இருபதில் நாங்கள் பெற்றிருந்தோம்
நாங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொண்ட போது

எங்கள் புத்திசாலித்தனமான பிறப்புறுப்புகளிலிருந்து
கசிந்து கொண்டிருந்த

கூர்மையான சிந்தனைகளுடன்
எங்கள் அறிவுத்திறம் குமிழியிட்ட போது

உலகின் அனைத்துப் பொய்களையும் வீழ்த்தியவாறு
நிலக்கோள முற்றுகை போல எங்கள் இசை ஒலித்த போது

ஓ பிறகுதான் நாங்கள் உண்மை பற்றி அறிந்து கொண்டோம்
பிறகு காக்காய் பொன் போல மின்னினோம்

அலை அலையாய் உயரும் ஒரு நதியின்
கரையில் இப்போது நாங்கள் நிற்கிறோம்

ஆனால் அது குடிப்பதற்கு மிகவும் உவர்ப்பாக இருக்கிறது



தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

படகுகளை வாழ்த்துதல்

லூசிலி கிளிஃப்டன்

நமது புரிதலின் விளிம்பில்
இப்போது கூட நுழைந்து கொண்டிருக்கும்
இந்த அலை
அச்சம் தோய்ந்த முகத்துக்கு அப்பால்
உங்களைச் சுமந்து செல்லட்டும்
நீங்கள் காற்றை முத்தமிட்டு
பின்னர் அதிலிருந்து திரும்புவீர்களாக
நிச்சயமாக அது உங்கள் ஆதரவை நேசிக்கும்
உங்கள் கண்கள் நீரை நோக்கித் திறக்கட்டும்
எப்பொழுதும் அலையடிக்கும் நீர்
நீங்கள் உங்கள் அறியாமையில் பயணிப்பீர்களாக
இதிலிருந்து அது வரை.


தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

கவிதையை உண்ணுதல்

மார்க் ஸ்ட்ரேண்ட்

எனது கடைவாயில் வழிகிறது மை.
எனது மகிழ்ச்சி போல வேறொன்றில்லை.
நான் கவிதையை உண்டு கொண்டிருக்கிறேன்.

நூலகப் பெண்மணி தான் காண்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார்.
அவர் கண்களில் கலவரம்.
அவர் தனது ஆடைக்குள் இருந்த தனது கரங்களை வீசி நடக்கிறார்.

கவிதைகள் வெளியேறுகின்றன.
ஒளி மங்குகிறது.
தரைத்தளப் படிக்கட்டுகளிலிருந்து நாய்கள் மேலே வருகின்றன.

அவற்றின் விழிப்பந்துகள் சுழல்கின்றன.
அவற்றின் பொன்னிறக் கால்கள் தூரிகை போல மின்னுகின்றன.
இரங்கத்தக்க நூலகர் தனது பாதங்களை உற்று நோக்கி அழுகிறார்.

அவரால் சட்டென உணர்ந்து கொள்ள முடியவில்லை.
நான் முழந்தாளிட்டு அவர் கையை நக்கினேன்,
அவர் அலறுகிறார்.

நான் ஒரு புதிய மனிதன்.
அவரைப் பார்த்து உறுமிக் குரைக்கிறேன்.
அறிவார்த்த இருளில் பேருவகையுடன் துள்ளிக் குதிக்கிறேன்.


தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
வாக்குறுதி

வெண்டி ஜூ

அறிகுறிகளின் மூலம் தீர்வு காண்பது கடவுளாக இருந்தது, தினமும்
இருமுறை அந்த ஆன்மா தனக்குத் தானே சிக்கலை
அவிழ்க்கும்வரை. எழுதப்படாத கடந்தகால நாட்களுக்குள்
பயணித்தேன், விடலைகள் சாளரத்திற்கு ஒரு வெளிப்படையான
கொட்டாவியைச் சமர்ப்பிக்கிறார்கள். ஒரு பாதாம் கொட்டை
எனது அன்பிற்கினியவரின் கடுமையான தருணத்தினுள்
வீழ்ந்து, ஒரு சொல் போல நோயாளியைத் தாக்கியவாறு
கிடந்தது. வாக்குறுதியையும் நினைவில் வைக்க இயலாத
வெப்பம் நிறைந்த வெண்மையான நட்சத்திரங்களையும்
முணுமுணுக்கும் என் தந்தையைக் கவனித்தபடி அவநம்பிக்கையில்
உறைந்திருந்தேன். யாரும் காயப்படவில்லை, சில நிறைவுறாத
மறையாற்றல்கள் அறையிலிருந்து வெளியேறுகின்றன. நுழைகிறது, அறிவு.
இருண்மையை விரட்ட வந்த மனிதர்கள், என் எண்ணங்களை
ஒரு கொதிநிலைக்கு விரட்டினார்கள். நாம் உழன்ற ஒவ்வொரு தசாப்தமும்
தவறான புரிதலின் ஒரு வகைமையாக இருந்தது. பல வருடங்களாக
நம் கருத்துகளைக் கேட்பவரிடம் நாம் பற்களைக் காண்பித்துக்
கொண்டிருந்தோம். விடுபட்ட உள்ளீட்டில் எனது தாபங்கள்
பலவீனமடைந்ததை உணர்ந்தேன். இலைகள் விசுவாசத்துடன்
ஒவ்வொன்றாக கிளைகளிலிருந்து உதிர்ந்தன. ஆனால்
அனைத்து முரண்களுக்கும் எதிராக நான் உங்களுக்கு
எழுதினேன். பணம். காகிதவேலை. காதலின் வலுவான
திறந்த கதவு. விமர்சனம். அவமதிப்பு. தொலைநோக்கு மற்றும்
அவ்வப்போது போதுமான நேரம்.


தமிழில்: மோகன ரவிச்சந்திரன் 

Saturday, September 1, 2018

ஒரு கனவுக்குள் ஒரு கனவு

எட்கர் ஆலன் போ



புருவத்தின் மீதான இந்த முத்தத்தை எடுத்துக் கொள்!
பிறகு, இப்போது உன்னிடமிருந்து விடைபெறுதலையும்,
இவ்வாறு ஒப்புக் கொள்கிறேன் –
உன்மீது தவறில்லை, யார் கருதியது
எனது நாட்கள் ஒரு கனவென்று;
இன்னும் எதிர்பார்ப்பு தூரப் பறந்தால்
ஒரு இரவில், அல்லது ஒரு நாளில்,
ஒரு பார்வையில், அல்லது இன்மையில்,
ஆகவே சற்றுக் குறைவானது ஓடி விட்டதா?
நாம் காணும் அல்லது தோன்றும் அனைத்தும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவு.

அலைகளால் துன்புறுத்தப்பட்ட கரையின்
கர்ஜித்தலின் மத்தியில் நிற்கிறேன்,
பொன்னிற மணலின் தானியங்களை
எனது உள்ளங்கையில் பிடித்திருக்கிறேன் –
எவ்வளவு கொஞ்சம்!  இன்னமும் அவை எவ்வாறு தவழ்கின்றன
எனது விரல்களின் வாயிலாக வெகு ஆழத்திற்கு,
நான் அழுகையில் – நான் அழுகையில்!
ஓ கடவுளே! அவற்றை இறுகப்பற்றி
என்னால் உள்வாங்க முடியாதா?
ஓ கடவுளே! இரக்கமற்ற அலைகளிடமிருந்து
என்னால் ஒன்றையாவது காப்பாற்ற முடியாதா?
நாம் காணும் அல்லது தோன்றும் அனைத்தும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவா?
 





அமைதி இழந்த பள்ளத்தாக்கு

எட்கர் ஆலன் போ



ஒருமுறை அது சிரித்தது ஒரு அமைதியான பள்ளத்தாக்கு
அங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை;
அவர்கள் யுத்த களத்திற்குச் சென்று விட்டனர்,
சாந்தமான கண்கள் கொண்ட நட்சத்திரங்களை நம்பி,
ஒவ்வொரு இரவும், அவர்களின் வான்நிறக் கோபுரங்களிலிருந்து,
பூக்கள் மீது கவனம் செலுத்தியபடி,
அனைத்து நாட்களின் இடையிலும்
சிவப்புச் சூரிய ஒளி சோம்பலாகப் படுத்திருக்கும்.
இப்போது ஒவ்வொரு பார்வையாளரும் ஒப்புதல் அளிப்பார்
துயரப் பள்ளத்தாக்கின் அமைதியிழப்பை.
அங்கு எதுவும் அசைவற்று இல்லை –
மாயத் தனிமை மீது
மகிழ்ச்சியற்றுச் சிந்திக்கும் கர்வத்தை எதுவும் காப்பாற்றாது.
ஆ, பனி படர்ந்த தீவுகளைச் சுற்றிலும் உள்ள
குளிர் நதிகளைப் போல் துடிக்கும்
அந்த மரங்கள் எந்தக் காற்றாலும் கிளர்ச்சியடையவில்லை!
ஆ, அந்த மேகங்களை எந்தக் காற்றாலும் விரட்டியடிக்க முடியவில்லை
அமைதியற்ற சுவர்க்கம் வழியாக அவை சலசலக்கின்றன
நடுக்கத்துடன், காலையிலிருந்து மாலை வரை,
அங்கு ஊதா நிறங்களின் மீது அவை படுத்திருக்கின்றன
மானுடக் கண்களின் எண்ணற்ற வகைகளில் –
அங்கு லில்லி மலர்களின் மீது அவை அலையடிக்கின்றன,
அழுகின்றன ஒரு பெயரற்ற கல்லறை மீது!
அவை அலைகின்றன: அவற்றின் நறுமண இதழ்களுக்கு வெளியே
நித்யத்துவப் பனித்துளிகள் சொட்டு சொட்டாய்ச் சிந்துகின்றன.
அவை அழுகின்றன: மென்மையான தண்டுகளிலிருந்து
வற்றாத கண்ணீர்த் துளிகள் ரத்தினக் கற்களில் இறங்குகின்றன.
   



தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

டயானாவின் மரம்

அலஹேந்த்ரா பிஸார்நிக்



முன்னுரை:
ஆக்டேவியா பாஸ்

  
அலஹேந்த்ரா பிஸார்நிக்கின் டயானாவின் மரம் (Chem.): அதீத வெப்பநிலைகளைப் பொறுத்து, மெய்மையின் ஒரு தீர்வில், தீவிரப் பதட்டம் மற்றும் திகைப்பூட்டும் தெளிவு ஆகியவற்றின் இணைப்பால் வடிவமைக்கப்பட்ட ஒரு சொற்பொருள் சார்ந்த படிகமாக்கல். இந்த உலோகக் கலவையின் தயாரிப்பு பொய்களின் தடயங்களைக் கொண்டிருக்கவில்லை. (Bot.): டயானாவின் மரம் தெளிவாக உள்ளது, எந்த இருண்மையையும் தரவில்லை. அதன் சுய ஒளியை அது தருகிறது, சுருக்கமாகவும் சற்று மினுங்கியபடியும். அமெரிக்காவின் தரிசு நிலம் அதன் பூர்வீகம். அங்கு வரவேற்பற்ற சூழல், கடுமையான சொல்லாடல்களும் சமய முழக்கங்களும், மற்றும் உயிர்ப்புமிக்க இனங்களின் பொதுவான மந்த நிலை, அதன் நட்புகள், அனைத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈடுகட்டலின் அரிய நிகழ்வான இந்தத் தாவரத்தின் ஒளியாடல் வாயிலாகத் தூண்டுதலில் ஈடுபட்டுள்ளன. அதற்கு வேர்கள் கிடையாது; அதன் தண்டு மெலிதான வெறியார்வம்மிக்க ஒளியின் ஒரு தூண்; அதன் இலைகள் மிகச் சிறியவை, ஒவ்வொன்றும் ஒளி உமிழும் பிரதியின் நான்கு அல்லது ஐந்து வரிகளால் உறையிடப்பட்டுள்ளது; அதன் காம்புகள் நேர்த்தியானவை மற்றும் முரட்டுத்தனமானவை, கூர்மையான விளிம்புகளுடன். பூக்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை, சூலகங்கள் மகரந்தங்களிலிருந்து மாறுபட்டவை, முன்னது தனித்துவம் வாய்ந்தவையாக, உள்ளார்ந்தவையாக மற்றும் மந்தமானவையாக இருக்கையில், பின்னது கூர்முனைகள், வார்ப்படங்கள் அல்லது மிக அரிதாக முட்கள் போன்ற வடிவம் கொண்டவை. (Myth. & Ethn.): பெண்கடவுள் டயானாவின் வில் இந்தப் புனித மரத்தின் ஒரு கிளை என பழங்குடியினர் நம்பினர். அடிமரத்தின் மீதுள்ள தழும்பு பிரபஞ்சப் (பெண்) பாலினமாக இருப்பதாக எண்ணப்படுகிறது. இது ஒரு அத்தி மரம் பற்றிய குறிப்பிட்ட கோட்பாட்டிற்கான ஒரு மறைமுகக் குறிப்பாக இருக்க முடியும் (பசுங்கிளைகளின் மரச் சாறு, பால் மற்றும் நிலவுத் தன்மை கொண்டதாக இருக்கிறது). அந்தத் தொன்மம் மானுட அர்ப்பணித்தலைக் குறியீடாகக் கொண்டுள்ளது, புதிய நிலவின் இரவில், பெண்துறவியின் வாயில் (பரப்புகளின் அடி மட்டத்திற்கும் மேல் மட்டத்திற்கும் இடையில் அவள் தானே ஒரு இணைவின் ஆதி உருவம்)  படிமங்களின் மறு உருவாக்கத்தை ஊக்கப்படுத்த ஏதுவாக, ஒரு இளைய விடலையின் உடல் (அது ஆணா, பெண்ணா, தெரியாது) நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. டயானாவின் மரம் பெண்கடவுளின் பல ஆண் தன்மைகளில் ஒன்று.  தெளிவற்ற விசயங்களின் பாலினத் தன்மையற்ற மூலங்களுக்கான மற்றொரு சான்றாக சிலர் இதைக் காண்கின்றனர். வேறு சிலர் அந்த மரம் அபகரிக்கும் ஆண் பால்வெளி மண்டலக் கூறுகளை அர்த்தப்படுத்துவதாக விவாதிக்கின்றனர், அதன் மூலம் மரபார்த்தச் சடங்குகள் சூரியனின் ஆதிகாலக் கதிர்களின் ஜாலவித்தைச் சிதைவைக் குறிப்பதாகவும் சொல்கின்றனர். நமது சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, இந்தக் கருதுகோள்களில் ஏதாவது ஒன்றின் சார்பாகத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. எனினும் இந்தச் சடங்குகளைக் கொண்டாடுபவர் பின்னர் அந்த ஒளிரும் நிலக்கரிகளை விழுங்கிக் கொள்ள வேண்டும், ஒரு நடைமுறையாக இன்று அது பின்பற்றப்படுகிறது. (Blaz. & Her.): ஒரு பேசும் தோள்சட்டை. (Phys.): நீண்ட காலமாக, டயானாவின் மரத்தின் பெளதீக இருத்தலை விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். அதன் அதீதத் தெளிவின் காரணமாக, வெகு சிலர் உண்மையாகவே அதைக் காண முடிகிறது. உண்மையில், தனிமை, அவதானித்தல் மற்றும் பொதுவான நேர்த்தியான உணர்திறன் உட்பட அவசியமான பார்வைரீதியான இயல்புகளைச் சாதிப்பதற்கான முன்நிபந்தனைகள். தங்கள் அறிவார்த்தத்தின் மீது ஒரு மதிப்பை கட்டமைக்கும் தனி நபர்கள் சில வேளைகளில் தங்கள் அனைத்துச் சான்றுகளுக்காகவும், தங்களால் இன்னமும் எதையும் காண முடியவில்லை என புகார் கூறுகின்றனர். டயானாவின் மரம்  ஒரு புவி சார்ந்த விசயமாகக் கருதப்பட முடியாததை மனதில் கொண்டுள்ள அவர்களின் தவறான கருத்துருவாக்கங்களை நிவர்த்தி செய்யலாம். மாறாக, அதற்கு அப்பால் நாம் காண்பது ஒரு (உயிரூட்டப்பட்ட) பொருள்; நமது பார்வைப் புலங்களுக்கு உதவி செய்வதற்கான ஒரு இயற்கை உபகரணம். மேலும், தந்தக் கோபுர நிலைகளிலிருந்து அனைத்துவிதத்திலும் தாழ்த்தப்பட்ட தப்பெண்ணங்களுக்காக, மரபுவழி அல்லாத விமர்சகரால் மேற்கொள்ளப்படும் ஒரு துரித விசாரணை அதை முற்றிலும் நிராகரிப்பது போதுமானது. சூரிய வெளிச்சத்தில் நிலைப்படுத்தப்படும் பொழுது, டயானாவின் மரம் அதன் ஒளியைப் பிரதிபலித்து, அதன் கதிர்களை ஒரு கவிதை அழைக்கப்படும் ஒரு குவிமையத்தில் இணைக்கிறது, அது அதன் அதிர்வுகளைச் சிதைக்கக்கூடிய, மென்மைப்படுத்தக்கூடிய அல்லது வெறுமையாக்கக்கூடிய ஒளிரும் வெப்பத்தை அனுமதிக்கிறது. இந்தப் பரிசோதனைகளை நமது மொழியின் இலக்கிய விமர்சகர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்.

ஆக்டேவியா பாஸ்
பாரீஸ், ஏப்ரல் 1962.





       


டயானாவின் மரம்
அலஹேந்த்ரா பிஸார்நிக்


1.
விடியலுக்காக நானே அந்தத் துள்ளலை உருவாக்கினேன்.
ஒளியின் அருகில் எனது உடலை நிலைப்படுத்தி
பிறப்பின் துயரம் பற்றி பாடினேன்.



2.
இவை சில சாத்தியமுள்ள பதிப்புகள்:
ஒரு துளை, ஒரு நடுங்கும் சுவர்...




3.
வெறும் தாகம்
மெளனம்
முரண் இல்லை
என்னிடம் சற்று எச்சரிக்கையாயிரு, என் அன்பே
வெறுமையான கோப்பைகளுடன் உள்ள பயணியின் பாலைவனத்தில்
மெளனமாக இருக்கும் பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாயிரு
மற்றும் அவள் நிழலின் நிழலுடனும்.



4.
அவ்ரோரா மற்றும் ஜூலியோ கொர்த்தஸாருக்கு
                                                        இப்போது பிறகு:
நினைவிலிருந்து அகன்ற பெண்ணுக்கான அஞ்சலிகளைத்
தேடும் அவர்களின் கரங்கள் மூழ்குவதை யார் நிறுத்துவது?
குளிர் அஞ்சலி செலுத்தும். காற்று அஞ்சலி செலுத்தும். மழையும்
அஞ்சலி செலுத்தும். அதேபோல, இடிமுழக்கமும்.


5.
ஒரே ஒரு முறை திறந்த கண்களுடன்
வாழ்தலின் ஒரு சிறு தருணத்திற்காக மட்டும்
அறிவார்த்தத்தின் மீது சிறு பூக்களையும்
 குரல் இழந்த ஒரு மனிதனின் வாயில்
உள்ள சொற்களைப் போல நடனமாடுவதையும்
காணும் ஒரு நிமிடத்திற்காக மட்டும்




6.
அவளுடைய நினைவின்
பொன்னுலகத்தில் அவள் ஆடைகளைக் களைகிறாள்
அவளுடைய பார்வைக் கோணங்களின்
அச்சம் மிகுந்த விதி பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது
இருத்தலற்ற ஒன்றுக்குப் பெயரிடுவது எவ்வாறு
எனத் தெரியாமல் இருப்பது பற்றி அவள் அச்சம் கொள்கிறாள்.



7.
அவள் தாவிக் குதிக்கிறாள், மேற்சட்டை நெருப்பு பற்ற,
நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரத்திற்கு,
நிழலிருந்து நிழலுக்கு.
காற்றின் இந்தக் காதலனின்
நெருங்கிப் பழகாத ஒரு மரணத்தில் அவள் மரணிக்கிறாள்.




8.
ஒரு ஒளிரச் செய்யும் நினைவு, நான் எதிர்பார்த்திருந்த
நிழலால் தொல்லை தரும் ஒரு படி அரங்கம்.
அது வருகை தரும் என்பது உண்மையல்ல. அது வருகை தராது
என்பது உண்மையல்ல.




9.
இந்த உறுப்பெச்சங்கள் இரவில் பளிச்சிடுகின்றன,
ஒரு திண்மமான பறவையின் உயிர்ப்புள்ள தொண்டையில்
இந்தச் சொற்கள் மதிப்புமிக்க கற்கள் போல,
வசீகரமான இந்தப் பச்சை,
வாட்டும் இந்த இளஞ்சிவப்பு,
வெறுமையான இந்த மறைபொருள் இதயம்.



ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:
யுவெட்டே ஸீகெர்த்


தமிழில்: மோகன ரவிச்சந்திரன்


பூஜ்ஜியம்


ஸாப்ரினா ஃபெதெல்



அவள் அறிந்திருந்தாள்
எனது தந்தை ஒரு மண்டியிடலில் உருக்குலைந்து விட்டதை,
கைகளை வெளிப்புறமாக நீட்டியபடி,
ஆயத்த உணவுகளின் ஈரக் குவளை காத்திருக்கிறது
நக்கிச் சுவைப்பதற்கு
சுத்தமாக

பிலிப்பைனியர்களுக்கு பரஸ்பரம் காணாமல் போயிற்று

இறுக்கமாகப் பற்றி, மழைத்துளிகள்
அல்லது வியர்வைத் துளிகள் போல, அறிவார்த்த வாழ்வின்
உற்சாகம் விதானத்தை உடைத்துத் திறந்த போது, படர்கொடிகள்
வெடிப்புற்றன மிதக்கின்ற
மற்றும் விழுகின்ற ரிப்பன் துண்டுகளுக்குள்
ஒரு நரிப் பொந்தை நில வளைக்குள் ஒளித்தாள்
அவள் கால்களுக்கு
அடியில்

இன்மையிலிருந்து சுழன்று, எங்கும் நகராமல்,
ஒரு காலாதீதம் பறக்கிறது
ஒளிந்து
தேடும் மையத்தில் நிலைகொண்ட ஆழ்ந்த பெரும் பிளவில்
அவள் தமது மனிதர்களை இழந்தாள்
தமது குரைப்பொலியை இழந்தாள்
வாழ்தலின்
மற்றொரு வழியின் நினைவுகளையும் இழந்தாள்

அந்தச் சுவாலை எழும் பொழுது
மனிதர்களின் உரத்த பேச்சொலியைக் கேட்க முயற்சிக்காத பொழுது

அவள் தலையை ஒரு வெடிகுண்டு ஊடுருவிச் சென்றது.

அவள் பெயர் பூஜ்ஜியம்.



தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
    
ஸாப்ரினா ஃபெதெல்லின் அறிமுக நாவல், Leaving Kent State 2016-ல் ஹார்வேர்ட் ஸ்கொயர் எடிசன்ஸால் வெளியிடப்பட்டு, ஒரு ஐந்து நட்சத்திர Litpick மதிப்புரையைப் பெற்றுள்ளது. அவருடைய கவிதைகளும் உரைநடைகளும் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவருடைய படைப்பு Pushcart Prize, a storySouth Million Writers’ Award-க்கும், a Sundress Publication’s Best of the Net award-க்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் லெஸ்லி பல்கலைக் கழகத்தின் படைப்பிலக்கியப் பிரிவில் 2014-ஆம் ஆண்டு முதுகலை நுண்கலைப் பட்டதாரி. அவரை விசித்திரமானவராகக் கருதும் ஒரு குடும்பத்தில் பெம்பர்லீ அவரால் அழைக்கப்படும் ஒரு வீட்டில் அவர் வசித்து வருகிறார். மேலும் அறிய www.sabrinafedel.com வலைப் பக்கத்தை அணுகலாம்.


உறுதியாக அமர்ந்து கொள்


சார்லஸ் சிமிக்


பழைய கடிகாரம்
அமைதியில் தோய்ந்த அதன் உரத்த ஒலியுடன்
இறந்தவரை எழுப்பும் பொழுது,
நித்தியத்துவம் உள் நுழைந்தது.
கதவை நோக்கிப் பார்வையிட்டது கண்ணாடி
ஒரு நடைப்பயிற்சிக்காக வெளியே
அழைத்துச் செல்லப்பட விரும்பும்
ஒரு நாயின் கண்களுடன்.




  

உடல்

சார்லஸ் சிமிக்



அந்தக் கடைசிப் பெருநிலப் பகுதி
இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனது கரம் கனவு காண்கிறது, அதன் கப்பலைக்
கட்டமைக்கிறது. மாலுமிகளுக்காக
ஒரு கூடை எலும்புகளை எடுத்துச் செல்கிறது, உணவுக்காக
ஒரு முழு பீர் பாட்டில் உதிரம்.

சுவாசக் காற்று அதற்குத் தெரியும், அது வடக்கு நோக்கி வீசுகிறது.
மேற்கிலிருந்து வீசும் சுவாசக் காற்றுடன்
அது ஒவ்வொரு இரவும் கிழக்கு நோக்கிக் கப்பலைச் செலுத்தும்.

உறங்குகையில் உனது உடலின் வாசனை
கடலைப் பார்வையிடும் நிலப் பறவைகள்.

எனது தீண்டுதல் நெடிதுயர்ந்த கப்பலின் பாய்மரத்தில்.
அது காலை நான்கு மணிக்கு அழுகிறது
ஒரு லாந்தர் விளக்கை ஏற்றுவதற்காக
உலகின் விளிம்பின் மீது.


தமிழில்: மோகன ரவிச்சந்திரன்



சார்லஸ் சிமிக், முன்னாள் அமெரிக்க அரசவைக் கவிஞர், மிகச் சமீபத்தில் வெளியான The Lunatic (poetry) மற்றும் The Life of Images (prose) நூல்களின் ஆசிரியர்.  

இரண்டு கவிதைகள்

பாட்ரிக் ஜேம்ஸ் எர்ரிங்டன்



கற்பனைப் பரப்பு

நான் வழிபடுகிறேன், எனது கடவுளாக இரு.
The Tempest (II,ii)



எனது அனைத்துப் பிரயத்தனங்களுக்கும் மாறாக, நீண்ட காலமாக எந்தக் கடவுளும் இல்லை எனக்காக. வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு குழந்தையைப் போல, பின்னிருக்கையில் சற்றும் அனுபவித்தல் இல்லாமல், ஒரு வேளை

அவளுடைய முதல் திரைப்படத்தைக் கண்ட பிறகு, அவளுடைய இயல்பான கற்பனைத் தன்மையுடனான பயணம் முடிவில்லாமல் போயிருக்கலாம். நான் அந்தக் குழந்தையை ஒருபோதும் பெற முடியாது, ஆனால் அவளைக் கற்பனை செய்து பார்க்க முடியும் மேலும்

மாபெரும் பாசாங்குத்தனம் கொண்ட கற்பனையாளருக்காக நான் ஏன் இன்னமும் எனக்குள் வழிபடுதலில் அகப்பட்டிருக்கிறேன் எனச் சிந்திக்க விரும்புகிறேன், எனக்கு ஒன்றின் மீது மிகச் சரியாக நம்பிக்கை இல்லாத போதிலும். கற்பனை செய்யுங்கள்

அந்த முதல் உயிரினம் எவ்வாறு முற்றிலும் தனிமையானதாக
(சில காரணங்களுக்காக, ஒரு வெண்மை வால் மான் காலை ஒளியில்,
துடிப்புடன் நிற்பதை நான் காட்சிப் படுத்துகிறேன்)

நிகழ்வுகளின்-கற்பனை வனத்தில் மட்டும் உணர்ந்திருக்க
முடியும். ஒரு புத்தகத்தை வாசித்தல் போல அது, எவ்வித எச்சரிக்கையும்
இல்லாமல், உங்களைப் பெயரிட்டுக் குறிப்பிடுகிறது. நினைத்துப் பார்க்கிறேன்

ஒரு படுக்கையறையில் தனிமையில் அமர்ந்திருக்கும் கடவுள் பற்றி, சுற்றிலும்
சிதறிக் கிடக்கும் அதன் பொம்மைகளுடன், தோரணைமிக்க, செயலற்ற
செயல் மனிதர்களின் ஒரு முழுச் சுவர்க்கம் (உண்மையில், மின்கல அடுக்கு எதுவுமில்லை).

சற்று சிந்தியுங்கள் கண்டறியப்பட்ட உங்களைக் கண்டடைந்த
ஆச்சரியத்தை, அழைக்கப்பட்டீர்கள்-முதலில் ஒருவரால், பிறகு மற்றொருவரால்,
அதன் பின் முடிவின்றி, சில

காரணங்களுக்காக, அந்தக் குழந்தையை மீண்டும் நினைக்கிறேன், உறங்குகிறது இப்போது, இருண்ட மைல்கள் முகப்பு விளக்குகளுக்கு அப்பால் வனத்தினுள்
சறுக்குவது போல. அவள் சற்று அமைதியற்றுத் திரிகிறாள், காபி போல

ஒரு கோப்பையில், ஒரு கனவு எப்படியாவது அமைதியின்றி
நிகழ்வுகளின் நிதர்சனத்தில், அந்த இருக்கை, அந்தப் பனி-
மினுக்கும் மரத்துண்டுகள், அந்தத் தெளிவான வாழ்க்கை, அந்த இருள்.

• • •



அது அவசியமானதாக மாற வேண்டும் என்றால் திரட்டப்பட வேண்டும்

குளிர்காலம் மீண்டும், ஆரம்ப நாட்களாக இருந்தாலும், அந்த வானமும் நானும்
அதன் சுய ஒழுங்கை உணர முடிகிறது. பழைய தொகுப்பாளர் பணியிலிருந்து விலகுகிறார், நிற்கிறார்

வளைவில் உள்ள அங்காடியில் ரொட்டி, ஒயின்,
தேவையானதெல்லாம் பெற. பால், ஒரு வேளை-சென்றடைதல் அந்த ஒன்றிற்காக அவசியமில்லை எப்பொழுதும்

திரும்பவும், ஒவ்வொன்றையும் இன்றிரவு குடித்தாக வேண்டும்-கடைசி
இலையுதிர்காலச் செடிகள் சாளரத்தின் வழியாக ஒரு வாளியில். பெறுங்கள்

தரப்பட்டுள்ளவற்றை மட்டும். நான் உங்களை மேலும் அதிகமாக நேசித்திருக்கலாம்,
என நினைக்கிறேன். அனைத்து மாலைப் பொழுதுகளும், நான் உங்களைக் கைப்பற்ற முடிகிற அளவுக்கு உங்களைக் கைப்பற்றுகிறேன்

ஒன்றிணைந்து, சொற்றொடரியல் போல. உங்கள் முடி இலகுவாகக் காற்றில் படர்கிறது. கடந்து போனது திறந்திருந்த உணவகச் சமையலறை, அந்தி ஒளி மென்மையாகச் செல்கிறது மர வேலைப்பாடுகளில்

அலையும் எலியின் அனைத்து அரித்தல்களுடன், உதிர்ந்த முட்செடி விதை புல்வெளியில் துளிர் விடுகிறது. ஒரு பறவைவீடு வெறுமையானது அதற்கும் மேலே.  இழந்தாலும்கூட, காலம்

நம்மை இழக்காதிருக்கிறது, வருடங்கள், நினைவூட்டல்கள் போல, மீதங்கள் சில
நன்கு-திட்டமிடப்பட்ட விடுமுறை நாட்களிலிருந்து திரும்ப மீள்கின்றன. வரலாற்று நிலப்பரப்பாக இருக்கலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லை உண்டு,

நீங்கள் கூறுவதுண்டு, நகர விளக்குகளின் வெளிச்சம் தொலைதூரத்தைத் தவறவிடுகிறது திரண்ட இருளுக்கு எதிராக. அறிவு பற்றி சிந்திக்கிறேன், இப்போது, அவ்வளவு அதிகமாக அல்ல

தெரிந்த வரை அல்லது உணர்ந்த வரை அல்லது வருந்திய வரை. நான் உங்களை நேசித்திருக்கலாம் அனைத்து மணித்துளிகளிலும், நம்மை அவர்களிடமிருந்து இலகுவாகச் சறுக்க விட்டது போதும்

எண்ணிக்கையிடல் போல, அவசியமானது போல, இந்தக் கவிதை இங்கு முற்றுப் பெற வேண்டும். ஆனால், நகரத்தின் ஒரே தொகுப்பாளர் இன்றிரவுக்கு முன்னரே சறுக்கி விழுந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது

செடிகள் வாங்கும் பொழுது, ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருக்கலாம் அந்த முடிவின் மீது உறைந்து விடுவதில் உண்மையில் பயனில்லை என. அல்லது ஒரு வேளை யாராவது காத்திருக்கக்கூடும்

திரும்பவும் வீட்டில், மிக நீண்ட நேரமாக, நான் ஒன்று திரட்டுகிறேன், அவளுக்காக நேர்த்தியான சிலவற்றை அவன் செய்திருப்பதால், சிறியதான மற்றும் அவசியமானதைக் காட்டிலும் அதிகமான சிலவற்றை.  
  
• • •


தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

பாட்ரிக் ஜேம்ஸ் எர்ரிங்டன் கனடா, அல்பெர்ட்டா பிரைரீஸைச் சேர்ந்த ஒரு கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். London Magazine  கவிதை விருது 2016-ன் வெற்றியாளர். அவருடைய கவிதைகள் Best New Poets 2016The Iowa ReviewAmerican Literary ReviewWest BranchCider Press ReviewCopper NickelDiagramThe Adroit Journal மற்றும் Horsethief உட்பட பல பத்திரிகைகளிலும் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. கொலம்பியா பல்கலைக் கழகத்தின் MFA programme பட்டதாரியான பாட்ரிக், தற்பொழுது எடின்பர்க்கில் வசிக்கிறார். அங்கு அவர் புனித ஆண்ட்ரியஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.


அனைவருடைய கவனமும் ஒரே மையத்தில்

இடாலா கால்வினோ




பால்வெளி மண்டலத் திரள்களின் வேகம் பற்றிய எட்வின் பி.ஹப்பிளின் கணக்கீடுகளின் துவக்கம் வாயிலாக, அனைத்துப் பிரபஞ்ச விசயங்களும் ஒற்றைப் புள்ளியில் குவிந்திருக்கும் அந்தத் தருணத்தை, வெளியில் அது விரிவடையத் துவங்குவதற்கு முன், எங்களால் நிறுவ முடியும்.


இயல்பாகவே, நாங்கள் அனைவரும் அங்குதான் இருந்தோம், - பழைய Qfwfq கூறியது, - வேறு எங்கு நாங்கள் இருந்திருக்க முடியும்? வெளி என்ற ஒன்று இருக்க முடியும் என்பது அப்போது எங்கள் யாருக்கும் தெரியாது. அல்லது காலம் என்பது இருக்க முடியும் என்பதும்: மத்தி மீன் போல அங்கு வியாபிக்கும் காலத்தால் எங்களுக்கு என்ன பயன்?


“மத்தி மீன் போல வியாபிக்கும்” என ஒரு இலக்கியப் படிமத்தைப் பயன்படுத்திக் கூறுகிறேன்: உண்மையில், நாங்கள் வியாபிக்க ஒரு வெளி கூட அங்கு இல்லை. எங்கள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு புள்ளியும் மற்ற ஒவ்வொருவரின் ஒவ்வொரு புள்ளியுடன் ஒற்றைப் புள்ளியில் ஒரே சமயத்தில் ஒன்றிணைகிறது. நாங்கள் அனைவரும் இருந்த புள்ளி அது. உண்மையில், ஆளுமை வேறுபாடுகளுக்காக அல்லாமல், நாங்கள் மற்றவரைப் பற்றிக் கவலைப்படக்கூட இல்லை, ஏனென்றால், வெளி என்ற ஒன்று இல்லாத போது, Mr. Pbert Pberd போல மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிற அனைத்துக் காலமும் அதிக எரிச்சல் தரக்கூடிய விசயம்.      


நாங்கள் எத்தனை பேர் அங்கு இருந்தோம்? ஓ, என்னால் அதைத் தோராயமாகக்கூடக் கணக்கிட முடியாமல் போனது. கணக்கிடுவதற்காக, நாங்கள் அப்பால், குறைந்த பட்சம் சற்று அப்பால் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாறாக, நாங்கள் அனைவரும் அதே புள்ளியை ஆக்ரமித்துக் கொண்டோம். நீங்கள் நினைக்கக்கூடியதற்கு மாறாக, நட்புறவை ஊக்குவிக்கக்கூடிய ஒரு வகையான நிலைமை அல்ல அது; உதாரணமாக, மற்ற காலங்களின் சக மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுகின்றனர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அங்கு, நாங்கள் அனைவரும் சக மனிதர்களாக இருந்த காரணத்தால், காலை வணக்கமோ அல்லது மாலை வணக்கமோ கூட யாருக்கும் சொல்வதில்லை.


முடிவில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நண்பர்களோடு மட்டும் இணைந்திருந்தோம். Mrs. Ph(i)Nk0, அவளுடைய நண்பர் De XuaeauX, புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தினரான Z'zu மற்றும் நான் சற்று முன் குறிப்பிட்ட Mr. Pbert Pberd என எனக்கு நினைவில் உள்ளது. அங்கு ஒரு மிகச் சிறிய அறை இருந்ததால் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணியும் அங்கு இருந்தார் – “பராமரிப்பு ஊழியர்” என அழைக்கப்பட்டார் – ஒரே ஒருவர் மட்டும், இந்த முழுப் பிரபஞ்சத்திற்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அவர் நாள் முழுவதும் செய்வதற்கு ஒன்றுமில்லை, உள்ளே தூசு படியக்கூடிய ஒரு புள்ளியில்கூட ஒரு துளி தூசு கூட நுழைய முடியாது – எனவே அவர் அரட்டையடித்துக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் பொழுதைக் கழித்தார்.


நான் ஏற்கனவே பெயர் குறிப்பிட்டவர்களைச் சேர்த்து, நாங்கள் அதிக நெரிசல்மிக்கவர்களாக இருந்தோம்; அத்துடன் நாங்கள் அங்கு திணித்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்: இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைக்க பின்னர் பயன்படக் கூடிய அனைத்துப் பொருட்களும், புவியியலுக்கு (உதாரணத்திற்கு, வாஸ்கஸ்) அல்லது வேதியியலுக்கு (குறிப்பிட்ட பெரிலிய ஐஸடோப்புகள் போல) ஒதுக்கப்பட வேண்டியதிலிருந்து வானியலின் ஒரு பகுதியாகப் பின்னர் மாறக்கூடியது பற்றி (ஆந்த்ரோமெடாவின் நெபுலா போல) உங்களால் கூற இயலாத ஒரு வழியில், இப்போது சிதைக்கப்பட்டு, செறிவாக்கப்பட்டன. அனைத்துக்கும் மேலாக, Z'zu குடும்பத்தினரின் வீட்டுச் சாமான்கள் எப்பொழுதும் நிறைந்து வழிந்தன: முகாம் படுக்கைகள், பாய் விரிப்புகள், கூடைகள்; நீங்கள் எச்சரிக்கையாக இல்லை என்றால், இந்த Z'zu-க்கள், அவர்கள் ஒரு பெரிய குடும்பம் என்னும் ஒரு வேண்டுகோளுடன் அவர்கள் மட்டும் இந்த உலகத்தில் இருப்பதாகச் செயல்படத் துவங்கி விடுவர்: எங்களுடைய புள்ளியில் அவர்களுடைய துணிகளை உலர வைக்கவும் கூட விரும்புவர்.            

  
ஆனால் மற்றவர்கள் அங்கு முதலிலும் Z'zu-க்கள் பின்னரும் வந்த காரணத்தால், மற்றவர்களும் Z'zu-க்களை முதலில் “புலம் பெயர்ந்தவர்கள்” என அழைப்பதன் மூலம் காயப்படுத்தினர். அது வெறும் ஆதாரமற்ற பாரபட்சம் – எனக்குத் தெளிவாகத் தோன்றுகிறது – ஏனென்றால் முன், பின் எப்போதும் அவ்வாறு இருந்ததில்லை, எந்த இடத்திலிருந்தும் புலம் பெயர்தல் என்பது அல்ல, “புலம் பெயர்தல்” எனும் கருத்தாக்கத்தை அரூபமான, வெளி மற்றும் காலத்தின் புறப்பரப்பில் உள்வாங்கத் தூண்டுபவர்கள் இருந்தார்கள்.   


அது குறுகிய மனப்பாங்கு என நீங்கள் அழைக்கக்கூடியதாக இருந்தது, அந்தச் சமயத்தில் எங்கள் கண்ணோட்டம் மிகவும் முக்கியமற்றதாக இருந்தது. நாங்கள் ஒரு சூழலின் பிழையில் வளர்ந்தோம். எங்கள் அனைவருக்கு இடையிலும் அடிப்படையாக உள்ள மனப்பாங்கு உங்கள் மீது கவனம் கொள்கிறது: பேருந்து நிறுத்தத்தில், திரை அரங்கில், பன்னாட்டு பல் நிபுணர் மாநாட்டில் – எங்களில் இருவர் சந்திக்க நேரிட்டால், அது இன்றும் கூட வளர்ச்சியைப் பேணுகிறது – கடந்து போன நாட்களைப் பற்றி நினைவு கூறத் துவங்கி விடுகிறோம். யாரேனும் என்னை அடையாளம் காணும் பொழுது, நான் யாரையேனும் அடையாளம் காணும் பொழுது – நாங்கள் வணக்கம் கூறுகிறோம் – உடனடியாக எதைப்  பற்றியாவது வினவத் துவங்குகிறோம் (மற்றவர்களால் நினைவு கூறப்படும் சிலரை மட்டும் ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்தாலும் கூட), எனவே பழைய பூசல்கள், அவதூறுகள், களங்கம் கற்பித்தல்கள் பற்றியே மீண்டும் துவங்குகிறோம். யாரேனும் Mrs. Ph(i)Nk0 பற்றிக் குறிப்பிடும் வரை – ஒவ்வொரு உரையாடலும் இறுதியில் அவளைச் சுற்றியே நிகழ்கிறது – திடீரென முக்கியத்துவமின்மை புறந்தள்ளப்படுகிறது, நாங்கள் ஊக்கம் பெற்றவர்களாக, புளகாங்கிதமான, தன்னலமற்ற உணர்வு நிரம்பியவர்களாக உணர்கிறோம். எங்களில் யாரும் மறக்க முடியாத மற்றும் நாங்கள் அனைவரும் வருத்தம் தெரிவிக்கிற ஒரே ஒரு நபர் Mrs. Ph(i)Nk0. அவள் எந்த இடத்தில் நிலைகுலைந்து போனாள்? நான் அவளைக் காண்பதை நிறுத்தி விட்டேன்: Mrs. Ph(i)Nk0-வை, அவளுடைய மார்புகளை, அவளுடைய தொடைகளை, அவளுடைய ஆரஞ்சு நிற ஆடையை – அவளை இந்தப் பால்வெளி அமைப்பில் அல்லது வேறு எங்கும் இனி நாங்கள் மீண்டும் சந்திக்க முடியாது.  


நான் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்துகிறேன்: இந்தப் பிரபஞ்சம், ஒரு அரியக் கட்சியின் அதீதத்தை அடைந்த பிறகு, மீண்டும் செறிவுமிக்கதாக மாறிவிடும் என்னும் கோட்பாடு என்னை உறுதியாக இணங்கச் செய்ய முடியாது. இன்னமும் எங்களில் பலர் அதைக் கணக்கிட்டு, மீண்டும் நாங்கள் அனைவரும் அங்கு இருக்கக்கூடிய காலத்திற்காகத் தொடர்ச்சியாகத் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கடந்த மாதம், இங்கு தெருமுனையில் உள்ள மதுக்கூடத்திற்குச் சென்றேன். அங்கு யாரைப் பார்த்தேன்? Mr. Pbert Pberd. "என்ன விசேசம்? எதன் பொருட்டு இங்கு வந்தீர்கள்?" அவர் பாவியாவில் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் முகவராக இருக்கிறார் என்பதை அறிந்தேன். அவருடைய வெள்ளிப் பற்களுடன், அவருடைய பகட்டான ட்ரவுசர் கொக்கிகளுடன் அவர் எப்போதும் போலவே இருந்தார். அவர் ஒரு விசும்பலுடன் என்னிடம் கூறினார், “நாங்கள் அங்கு திரும்பவும் சென்ற போது, நாங்கள் உறுதிப்படுத்த வேண்டிய விசயம், இந்த முறை, குறிப்பிட்ட மக்கள் அங்கு இல்லை... நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்: அந்த Z'zu-க்கள். . ."


அவதானிப்புகளை பலர் ஒரே மாதிரியாக முன்வைத்து, “நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்... Mr. Pbert Pberd. . ." என முடிவாகக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று கூறி அவருக்கு பதிலளிக்க நான் விரும்பியிருக்க வேண்டும்.   


அந்த விசயத்தைத் தவிர்ப்பதற்காக, நான் மிக அவசரப்பட்டுக் கூறினேன்: “Mrs. Ph(i)Nk0 எப்படி இருக்கிறார்? நாங்கள் அவரை மீண்டும் அங்கு காண வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?” 


“ஆ, ஆம்... அவள் எல்லா விதத்திலும் மிக நன்றாக இருக்கிறாள்...” எனச் சற்று முகம் வாடிக் கூறினார். 


எங்கள் அனைவருக்கும் அந்தப் புள்ளிக்குத் திரும்புவதற்கான நம்பிக்கை என்பது அனைத்துக்கும் மேலாக, மீண்டும் ஒரு முறை Mrs. Ph(i)Nk0 உடன் இருப்பதற்கான நம்பிக்கைதான். (இதில் நான் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலுங்கூட, இது எனக்கும் பொருந்தும்.) அந்த மதுக்கூடத்தில் எப்போதும் நிகழ்வது போல, அவளைப் பற்றிப் பேசுவதில் லயித்து, பின் அங்கிருந்து அகன்றோம்; இன்னமும் அந்த ஞாபக முகத்தில் Mr. Pbert Pberd அவர்களின் துயரம் மங்கலாக நிழலாடியது.    


Mrs. Ph(i)Nk0 உடைய மாபெரும் ரகசியம் என்னவெனில் அவள் எங்களுக்குள் எந்தவிதப் பொறாமையையும் தூண்டவில்லை. அல்லது எந்தவிதமான வதந்திகளையும் கூடத் தூண்டவில்லை. அவள் அவருடைய நண்பர் Mr. De XuaeauX அவர்களுடன் படுக்கச் சென்றாள் என்னும் உண்மை எல்லோரும் நன்கு அறிந்ததே. ஆனால் ஒரு புள்ளியில், அங்கு ஒரு படுக்கை இருந்தால், அது முழுப் புள்ளியையும் ஆக்ரமித்திருக்கும், எனவே அது படுக்கைக்குச் செல்லுதல் எனும் கேள்வி அல்ல, ஆனால், அங்கு இருத்தல் என்பது தான் கவனிக்கத்தக்கது, ஏனென்றால் அந்தப் புள்ளியில் இருந்த எவரும் படுக்கையிலும் இருந்தார் என்பதுதான். அதன் தொடர்ச்சியாக, அவள் எங்கள் ஒவ்வொருவருடனும் படுக்கையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கத்தக்கது. அவள் மற்றொருவருடன் இருந்திருந்தால், அவளைப் பற்றிக் கூறியிருக்கப்பட வேண்டிய அனைத்து விசயங்களும் கூறப்பட வேண்டியதில்லை. சுத்தம் செய்யும் பெண்மணிதான் எப்பொழுதும் அவதூறுகளைத் தொடங்குவது, மற்றவர்கள் அவளைப் போலச் செய்வதற்காகத் துண்டப்படுவதில்லை. Z'zu குடும்பத்தினரின் விசயம் பற்றி – ஒரு மாற்றத்திற்காக! – பீதியூட்டும் விசயங்களை நாங்கள் கேட்க வேண்டியிருந்தது: தந்தை, மகள்கள், சகோதரர்கள், சகோதரிகள், தாய், அத்தைமார்கள்: அதிக அதிர்ச்சியூட்டும் மறைமுகக் குறிப்புக்கு முன் யாரும் எந்தவிதமான தயக்கத்தையும் காண்பிக்கவில்லை. ஆனால் அவளுக்கு அது வித்தியாசமானது: அவளிடமிருந்து நான் நகல் செய்த மகிழ்ச்சி அவளுக்குள் மறைந்திருத்தலின் மகிழ்ச்சி, punctiform, எனக்குள் அவளைப் பாதுகாத்தலின் மகிழ்ச்சி, punctiform, அதே சமயத்தில் அது குரூரச் சிந்தனை (அவளுக்குள் உள்ள எங்களின் punctiform இணைவின் வரைமுறையின்மைக்கு நன்றி) மற்றும் கற்பும் கூட (அவளுக்குத் தந்த punctiform இருண்மை). சுருக்கமாக: மேலும் அதிகமாக நான் என்ன கேட்க முடியும்?


எனக்கு உண்மை எனத் தெரிய வந்த இவையனைத்தும், மற்ற ஒவ்வொருவருக்கும் கூட உண்மையாக இருந்தது. அவளுக்கு: அவள் பெற்றிருந்த, பெறக் கிடைத்த சம மகிழ்ச்சி, அவள் எங்களை வரவேற்றாள், நேசித்தாள் மேலும் அனைவரையும் சமமாக ஆக்ரமித்துக் கொண்டாள்.


நாங்கள் அனைவரும் மிக நன்றாக ஒன்றிணைந்திருந்தோம், மிக நன்றாக, அசாதாரணமான ஏதோ ஒன்று நிகழ்வதற்கான வரம்பை வகுத்தது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அவளுக்குக் கூறுவதற்கு போதுமானதாக இருந்தது: “ஓ, எனக்கு மட்டும் ஏதாவது ஒரு அறை இருந்திருந்தால், உங்களுக்காக நூடுல்ஸ் செய்வதற்கு நான் எவ்வளவு ஆசை கொண்டிருப்பேன் சிறுவர்களே!” அந்தத் தருணத்தில், அவளுடைய வட்ட வடிவத் தோள்கள் ஆக்ரமிக்கும் அளவுக்கு, பணக்கட்டுகளைச் சுற்றிய ஊசிகளுடன் முன்னும் பின்னும் நகர்ந்தவாறு, அவளுடைய தோள்கள் மாவை அழுத்திப் பிசைகையில், அழுத்திப் பிசைகையில், பரந்த பலகையைத் தாறுமாறாகச் சிதறடிக்கும் மாவு மற்றும் முட்டைகளின் மிகப் பெரிய மண் மேட்டில் சாய்ந்திருக்கும் வெண்மையான, பளபளப்பான அவளுடைய மார்புகளுக்கான ஒரு வெளி பற்றி நாங்கள் அனைவரும் சிந்தித்தோம்; மாவு ஆக்ரமிக்கக்கூடிய, மாவுக்கான கோதுமை, மற்றும் கோதுமையை விளைவிக்கும் வயல்கள், மற்றும் வயல் பாசனத்திற்கான நீரோட்டத்தைத் தரும் மலைக்குன்றுகள், மற்றும் குழம்புக்காகத் தங்கள் இறைச்சியைத் தரும் பசுக்கூட்டத்திற்கான புல் நிலங்கள் பற்றிச் சிந்தித்தோம்; கோதுமையை அறுவடை செய்ய தன் கதிர்களுடன் வருகை தரும் சூரியனுக்கான வெளி பற்றிச் சிந்தித்தோம்;  வெப்ப வாயுக்களின் மேகங்களிலிருந்து செறிவாக்கும் சூரியனுக்கான வெளி பற்றிச் சிந்தித்தோம்; ஒவ்வொரு பால்வெளியையும், ஒவ்வொரு நெபுலாவையும், ஒவ்வொரு சூரியனையும், ஒவ்வொரு கோளையும் பற்றிக் கொள்ளத் தேவைப்படும் வெளி வாயிலாக நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலங்கள் மற்றும் பறந்து திரியும் விண்மீன் திரள்களின் எண்ணிக்கை பற்றிச் சிந்தித்தோம்; அதே சமயம் இந்த வெளி தவிர்க்க முடியாத வகையில் உருவாகி வருவதைப் பற்றிச் சிந்தித்தோம்; அதே சமயம் Mrs. Ph(i)Nk0 அந்த வார்த்தைகளை “...ஆ, என்ன நூடுல்ஸ், சிறுவர்களே!” என உச்சரித்த அவளை உள்ளடக்கிய அந்தப் புள்ளியைப் பற்றிச் சிந்தித்தோம்; நாங்கள் அனைவரும் ஒளி ஆண்டுகளில், ஒளி-நூற்றாண்டுகளில், ஒளி-மில்லியன் ஆண்டுகளில், தொலைவின் ஒரு ஒளி வட்டத்தில் விரிவடைந்து கொண்டிருந்தோம், நாங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் நான்கு மூலைகளுக்கும் வீசி எறியப்பட்டு வந்தோம் (பாவியாவுக்கான அனைத்து வழிகளிலும் Mr. Pbert Pberd), மற்றும் அவளும், எந்த வகையான ஆற்றல்-ஒளி-வெப்பம் என எனக்குத் தெரியாததில் கரைந்து போனாள், அவள், Mrs. Ph(i)Nk0, அவள் எங்களுக்கு நெருக்கமானதன் மத்தியில் இருந்தாள், சிறு உலகம் பெருந்தன்மையான தூண்டுதலுக்குத் தகுதியானதாக இருந்தது, “சிறுவர்களே, நான் உங்களுக்காகத் தயாரிக்கும் நூடுல்ஸ்”, பொதுவான அன்பின் உண்மையான எழுச்சி, அதே தருணத்தில் வெளி, முறையான பேச்சு, வெளி மற்றும் காலம், மற்றும் பிரபஞ்ச ஈர்ப்பு, மற்றும் ஈர்க்கும் பிரபஞ்சம் பற்றிய கருத்தியலைத் தோற்றுவித்து, சாத்தியமான பில்லியன், பில்லியன் சூரியன்களை, கோள்களை, கோதுமை வயல்களை உருவாக்கி, கோள்களின் கண்டங்கள் வாயிலாகச் சிதறடித்து, மாவு நிறைந்த, எண்ணெய் பளபளப்பான, பரந்த தோள்களுடன் Mrs. Ph(i)Nk0s அந்தத் தருணத்தில் தொலைந்து போனாள், நாங்கள் அவளுடைய இழப்புக்காகத் துயருற்றோம்.                             

  
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...