கவிதை எனும் சொல்லாடல்
மோகன ரவிச்சந்திரன்
இலக்கியப் பிரதிகளில் சிக்கலான அமைப்பைக் கொண்டது கவிதை. அது
உட்பொதிந்த பாணியிலான உடலமைப்பைப் பெற்றது. மற்ற இலக்கியச் சொல்லாடகளிலிருந்து
சற்றே வித்தியாசமானது கவிதையின் சொல்லாடல். அது பாத்திரப் பண்புகளைப்
பிரதிபலிக்கக்கூடியது. பலவிதமான வள ஆதாரங்களிலிருந்து துவங்கி, பிரக்ஞை வழியாக
மனப்பகுப்பாய்வினுள் நுழைந்து, பின் கவிதை எனும் இறுதி நிலையை அடைகிறது.
சொல்லாடலுக்குப் பொருத்தமான பொருள், பேசப்படும்
உள்ளீட்டையும் சொற்களையும் அமைப்புரீதியாகக் கட்டமைக்கும் எண்ணம், மனப்பாங்கு,
இயக்கம், நம்பிக்கை மற்றும் நடைமுறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட சிந்தனை அமைப்புமுறை என
ஃபூக்கோ கூறுகிறார்.
கவிதையின் சொல்லாடலை நுட்பமாக அவதானிக்கும் பொழுது, கட்டமைப்பு
போன்ற பிரதித்துவ மொழியியல் வரையறைகளாலும் கவித்துவச் சாதனங்களான அரூப மொழிக் கூறுகளாலும்
பின்னப்பட்டிருப்பதைக் காணலாம்.
செறிவுமிக்க கட்டமைப்பு, தர்க்கம், இலக்கு, பொருத்தம்,
வெளிப்பாட்டுத் தன்மை, நிலைப்பாடு மற்றும் உட்பிரதியியல் போன்றவை பிரதித்துவ
மொழியியல் வரையறைகளாக உள்ளன.
படிமம், உருமாற்றம், குறியீடு, சப்த ஒழுங்கு, சித்திரம்,
ஓசை லயம், எதிரொலி, முரணுரை, மறைமுகக் குறிப்பு மற்றும் குரல் போன்றவை கவித்துவச்
சாதனங்களாக இருக்கின்றன. இவை உட்பொதிந்த வெளிப்பாட்டினுள் மறைந்திருக்கும்
கவித்துவப் பிரதியை அடையாளம் காண உதவக் கூடியவை. சொல்லாடலின் அடித்தளம் ஒரு
வாக்கியம் அல்லது அறிக்கையின் எல்லைகளை விட ஆழமான மொழியியல் அமைப்பைச்
சார்ந்ததாகும்.
ஒரு கவிதை அதனை வாசிப்பவருக்கு ஒரு கிளர்ச்சியை அல்லது
தளர்ச்சியைத் தருவதாக உள்ளது. அதே வேளையில் அதன் சொல்லாடல் பற்றிய சில
விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது ஒரு இயல்பை, ஆசையை, சார்பை
அடையாளப்படுத்தி, ஒட்டுமொத்த ஆளுமையைப் புலப்படுத்தி விடுகிறது. எதற்காக இந்தக்
குறிப்பிட்ட வடிவம் என ஒரு ஐயப்பாட்டையும் எழுப்புகிறது. அதன் வடிவம் வாழ்நிலைக்
கூறுகளின் செயல்பாட்டு தளத்தை மேலும் ஆழமாக, நுட்பமாக விவரிக்கிறது. அதன் முந்தைய
தளத்தை விட்டு விலகியும் செல்கிறது.
கவிதையில் சொல்லாடல் என்பது விவரணையல்ல. மேலும் சொல்லாடல்
என்பது வாக்கியத்தில் காணப்படாத ஒன்று. வாக்கியம் சொல்லாடலின் பிரதிநிதியாக
இருக்கும். சொற்களின் பன்முக வெளிப்பாட்டுத் தன்மை ஒளிரும் ஒரு பிரதியில்
உண்மைநிலை ஒளித்து வைக்கப்படுகிறது. மெய்யும் மாயையும் நிறமாற்றம் கொள்வதாகத்
தோற்றம் பெறுகின்றன. ஆனால், சொல்லாடல் எதிரெதிர் நிலைகளுடன் திரைகளுக்கப்பால்
உண்மைநிலை மீது மையம் கொள்கிறது. ஒரு புலப்படாத மாற்றத்தைப் பொறுத்து, இனம்
காணத்தக்க நிதர்சனத்தை சொல்லாடல் ஒருங்கிணக்கிறது.
நாம் பலவிதமான மெய்மைகளுடன் வாழ்கிறோம். மெய்மைகளின்
எதிர்நிலைகளுடனும் வாழ்கிறோம். சொல்லாடலும் அவ்வாறே மெய்நிலைகளுடனும் மெய்நிலையின்
எதிர்நிலைகளுடனும் இருப்பதே சிறந்தது. அது சாத்தியப்பாடுகளைக் கண்டடைவதன் மூலம் அணுகுதலை
எளிமையாக்கும்.
வாழ்நிலையின் பிரதித்துவ மெய்மைகளின் பரந்த எல்லைகளால்
சொற்கள் பிரவகிக்கின்றன. அத்தகைய மெய்மைகளைப் பிரதிக்குள் கொண்டு வருவது மட்டுமே
ஒரு கவிதையின் நோக்கமல்ல. வெளிப்புறக் கூறுகளின் தெளிவான பிரதித்துவ உருவாக்கம்
உள்நோக்கங்களைக் கோடிட்டுக் காட்டுவதாகவும் இருக்க வேண்டும். எனவே அவை மெய்மைகளை
ஒரு குறியீடாக மாற்றும் ஒரு சொல்லாடல் செயலாக பிரதியில் தோன்றுகின்றன.
பாதலேரின் படைப்பு பாதலேர் எனும் ஒரு மனிதனின் தோல்வி
எனவும், வான்கோ எனும் கலைஞனின் படைப்பு ஒரு பித்தநிலையின் வெளிப்பாடு எனவும்
பார்த் கூறியிருப்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
கவிஞன் சூழலுடன் தன்னை நெறிப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட
தீவிர சிந்தித்தல் போக்கும் ஒரு பிரதியின் சொல்லாடல் முறையைத் தீர்மானிக்கிறது. ஆகவே
ஒவ்வொரு பிரதியும் குறிப்பீடுகளின் கூடுதல் பிரதித்துவ தளங்களினுள் ஒரு பாதைவெளியை
உருவாக்கி, அவற்றின் ஒழுங்கைச் சிதறடிப்பதன் மூலம் உயிர்ப்புள்ள ஒழுங்கீனத்தை
உருவாக்குகிறது. அதன் விளைவாக, அத்தளங்களின் அமைப்பு வடிவ மாற்றத்தைப் பெறுகிறது. ஒவ்வொரு
விசயமும் பிரதியில் அங்கும் இங்குமாக சிதறி ஒரு புதிய வடிவத்தை அடைகிறது. கவிஞனின்
நெறியாள்கையைச் சார்ந்து அந்த தளம் ஒரு அமைப்பைப் பெறுகிறது. அந்தச் செயல் மேலும்
மெய்நிகர் தன்மையாக மாறி, மறுகட்டமைப்புச் செயல்பாட்டுக்கு உகந்த அடித்தளத்தை
வழங்குகிறது.
எல்லைகளைக் கடந்த ஒருங்கிணைத்தலின்
முழுமையும் ஒரு சொல்லாடலின் செயலாக உள்ளது. மூலப்பொருளுக்கு எவ்விதச் சேதமும்
விளைவிக்காமல் ஏற்கனவே உள்ள ஒரு சொற்பொருள் தேய்ந்து வேறொரு புதிய பொருள்
தோன்றுகிறது. வடிவம் மற்றும் அடித்தளங்களுக்கிடையே ஒரு இணைப்பைத் தோற்றுவிக்கும்
முழுமை, தனித்துவ இயல்புகளின் பிளவுகளையும் தொடர்ச்சியாக ஒரு பார்வைநிலைக்கு
மாறிக் கொண்டிருப்பதையும் அனுமதிக்கிறது. இது பிரதியின் எல்லைகளைப் போலவே
பிரதித்துவ அமைப்பின் எல்லைகளையும் மீறுகிறது.
சொல்லாடலின் எல்லை மீறுதல் வாசிப்பவரின் அனுபவத்தைச்
சார்ந்த ஒன்றாகவும் தோற்றம் கொள்கிறது. அது மாயைநிலை நோக்கி வாசிப்பவரை வெகு
உத்வேகமாக விரட்டுகிறது; நிதர்சனத்தின் தற்காலிக மாற்றீடை நோக்கி இழுக்கிறது; உருமாற்றப்பட்ட
பிரதியின் உள்வாங்குதலை உறுதிப்படுத்துகிறது.
சொல்லாடலில் முக்கியமான ஒரு பங்களிப்பைத் தருவது
உணர்வுநிலை. அதன் செயல்பாடு, இயல்புகளை மறைத்து வைக்கும் செயலிலிருந்து சற்று வித்தியாசமானது.
ஏனெனில அது விவரணைகளைத் தருவதில்லை. சுய தேடலில் ஒரு சமிக்ஞை செய்ய அதற்கு ஒரு
மனப்பாங்கு தேவையாக உள்ளது. அது மெய்நிலையை வலிந்து ஏற்றுக் கொண்டு,
அவதானித்தல்வயமான இருப்புநிலையைப் பெற்றுள்ளது. உணர்வுகளின் வெளிப்பாடு
ஈர்ப்புமிக்கதாக உள்ளது. அது குறிகளின் கீழ் பிரதியை ஸ்திரப்படுத்துகிறது. இதை
இயல்பான மனப்பாங்குகளை ஒதுக்குவதாகவோ அல்லது மீறுவதாகவோ புரிந்து கொள்ளக் கூடாது. மேலும்
உணர்வுநிலை என்பது மெய்நிகர் அடித்தளங்களை வடிவமைப்பதாகவும் உள்ளது.
சூழல் என்பது மற்றொரு சிக்கலான அம்சம். மொழியும் சூழலும்
பிரிக்கமுடியாத மெய்மைகள். சூழல் என்பது உபயோகப்படுத்தப்பட்ட வடிவத்தைத் தாங்கும்
இடம் சார்ந்த நிலைப்பாடுகளின் தன்மைகளை உள்ளடக்கியது. அது மொழி உபயோகத்தின்
முக்கியமான கூறுகளில் ஒன்று.
பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சிக்கல். ஒதுக்கப்பட்டது
கிடைக்காததற்கான மாற்றீடு. பின்நவீனத்துவக் கவிஞன் வாசித்தல் அமைப்பின்
குறிப்பிட்ட அமைப்பை மட்டும் நிராகரிக்கவில்லை; வாசித்தல் நிகழ்வில் ஒழுங்கு
குலையாத சிந்தித்தலை நிறுவ முனையும் மனப்பாங்கையும் நிராகரிக்கின்றார். மேலும், ஒவ்வொரு
புதிய வாசித்தல் செயலிலும் வெற்றிகரமாகக் களமிறக்கப்பட்ட உத்திகளின் தொகுப்பில்
நம்பிக்கை வைக்கவும் மறுக்கிறார். நிலையான அவதானிக்கப்பட்ட மெய்மைகள், உலகளாவிய
உண்மைகளாக எளிதாகச் சுருக்கப்பட முடியாமல் இருப்பதால், தோல்வி என நிறுவப்பட்ட இவ்வாறான
உத்திகள் மாயைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
விரிவான கருத்துருவாக்கத்திற்கு எதிராக பின்நவீனத்துவக்
கவிதையின் முரண்பாட்டின் தர்க்கரீதியான விளைவு விரிவான இணைக் கருத்துருவாக்கத்தை
மறுதலித்தல் ஆகும். எனவே பின்நவீனத்துவக் கவிதையை வாசிக்கும் ஒருவர் பல்வேறு
நிலைகளில் அதன் முரண்பாடுமிக்க சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக,
தனித்துவம், நேர்த்தி, அடையாளம், சுதந்திரம், அறநெறி, தர்க்கம் மற்றும் உள்ளுணர்வு
போன்றவை. இவை நவீனத்துவப் பிரதிகளில் சிக்கலற்ற நிலைகளில் இருப்பவை. ஒரு கவிதை
வெறுமனே தனித்துவமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டுமெனில், தர்க்கரீதியாகவும்
சுதந்திரமானதாகவும் இருப்பதாக யூகிக்க முடிந்தால் போதும். பின்நவீனத்துவக் கவிஞன்
இத்தகைய சுயச் சான்றாதார மெய்மைகளை மிக எளிதாக மறுத்து விடுகிறான். அவனுக்கு
தனித்துவமாகவும், நேர்த்தியாகவும், தர்க்கரீதியானதாகவும், சுதந்திரமானதாகவும் இருப்பது
ஒரு கவிதை அல்ல.
லக்கான் மற்றும் சசூர் கூற்றுப்படி, மொழி (சொல்லாடல்)
என்பது முதன்மையான உந்துசக்தி; அது அனைத்துவித மானுடச் செயல்பாடுகளின் மற்றும்
சமூகக் கட்டமைப்பு மாற்றங்களின் பின்னணியில் செயல்படுகிறது. ஆனால்,
நவீனத்துவவாதிகள் சொல்லாடலை மேம்பாட்டுடனும் வளர்ச்சியுடனும் குறிப்பிடுகின்றனர். சொல்லாடலின்
மற்றொரு முக்கியமான செயல் என்னவெனில், பின்நவீனத்துவக் கோட்பாடுகளால்
விவாதிக்கப்பட்ட மெய்மையை உருவாக்கம் செய்து பாதுகாப்பதாகும்.
ஆதாரம்:
1.
Foucault
on the best definition of discourse
2.
Lyotard, Postmodernism Explained
3.
Benjamin,
Walter, ‘The Work of Art in the Age of Mechanical Reproduction’
5.
Postmodern
Poetry Meets Modernist Discourse - Jos Joosten & Thomas Vaessens
6.
The Significance of Fictionalizing - Wolfgang
Iser
7.
The death of the author & Image,
Music, Text – Roland Barths
8. Jacques
Lacan and Ferdinand de Saussure on Language