பசுமாடு
மேய்க்கும் பெரியம்மாவுக்கு
பசுவின்
சுபாவம் தெரியும்.
பெரியம்மாவின்
சுபாவம் பசுமாட்டுக்குத் தெரியும்.
பசுவின்
குரலொலியில் அதன் தேவைகளைப்
புரிந்து
கொள்கிறாள் பெரியம்மா.
பசுவின்
முகத்தைக் கையில் ஏந்தி
மார்போடு
அணைக்கும் பொழுது
பெரியம்மாவின்
உடல் சூட்டிலிருந்து
அவள்
ஆசைகளையும் ஏக்கங்களையும்
அறிந்து
கொள்கிறது பசுமாடு.
முகத்தில் அவளைத் தாங்கி
அவள்
அணைப்பில் சற்று நேரம் கிறங்கி நிற்கிறது
அசையாமல்.
அசைவற்ற
அந்த கணம்
அன்பு
முகிழ்த்து பிரவகிக்க
இருவர்
உடல்களும் சிலிர்க்கின்றன.
பிள்ளைகளைப்
பிரிந்த புத்திர சோகத்தை
இருவரும்
பகிர்ந்து கொள்கின்றனர்.
உயிரினப்
பேதமற்ற உறவுகளுக்கு
அறிவின்
அளவுகோல் எப்படிப் பொருந்தும்?
No comments:
Post a Comment