Monday, February 23, 2015

ஒரு கோட்டோவியத்தை விழுங்குகிறது மின்னல்

எந்த அளவுள்ள புகைப்படம் எனக் கேட்கிறாய்
கருப்பு வெள்ளையா அல்லது வண்ணமா எனவும்
ஒரு கனவு நகரத்திற்குள் என்னை அழைத்துச் செல்கிறாய்
சற்று நேரம் அந்தப் பிரபஞ்ச சௌந்தர்யத்தில்
பறந்து திரிய அனுமதிக்கிறாய்
கலைந்த கேசத்தை நேர்த்தியாக வாரி
கலைத்த முகத்தில் ஒப்பனை செய்யச் சொல்கிறாய்
புகைப்படக் கருவி முன் அமர வைத்து
எனது உடையைச் சரி செய்து
முகத்தைப் பிடித்துச் சற்று சாய்வாகத் திருப்புகிறாய்
புகைப்படக் கருவியின் பின்புறம் சென்று
லென்ஸ் வளையத்தினடியில் இடது ஆட்காட்டி விரலை நீட்டி
எனது பார்வையை அதில் குவிக்கச் சொல்கிறாய்
மின்சார ஒளியை என்மீது பாய்ச்சுகிறாய்
புன்னகைக்கச் சொல்கிறாய்
ஒரு மின்னலை என்மீது செலுத்துகிறாய்
ஒரு அதிர்வை எனக்குள் விதைக்கிறாய்
ஒரு வயோதிக மரத்தில்
ஒரு வாலிப இலையைப் படைக்கிறாய்
படைப்பு ரகசியத்தை என்மீது திணிக்கிறாய்
என்னைச் சிதைக்கிறாய்

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...