Monday, February 23, 2015

நீட்ஷே

தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து...
நீட்ஷே
2
“எதிர் நிலைகளிலிருந்து எவ்வாறு ஆதார நிலை தோன்றுகிறது? உதாரணமாக தவறுகளிலிருந்து உண்மையா அல்லது வஞ்சகத்தின் மீதான சக்தியிலிருந்து மெய்மையின் மீதான சக்தியா அல்லது சுயநலத்திலிருந்து சுயநலமற்ற செயல்பாடா அல்லது காமத்திலிருந்து சந்நியாசியின் புனிதமும் தீட்சண்யமுமான பார்வையா? அவ்வாறான மூலாதாரங்கள் அசாத்தியமானவை. அவற்றைக் கனவு காண்பவன் ஒரு முட்டாள். உண்மையில் மோசமானவன். உயர் மதிப்பு கொண்ட பொருள்கள் மற்றொரு வினோதமான சிறப்பியல்பு கொண்ட மூலாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவை இந்த நிலையற்ற, வசியப்படுத்துகின்ற, வஞ்சகத்தன்மைமிக்க, அற்பமான உலகிலிருந்தும் காமமும் மாயையும் கொண்ட குழப்பத்திலிருந்தும் மூலத்தின் தடயத்தைப் பெற முடியாது. செயல்படுபொருளாக உள்ள மறைமுகக் கடவுளான “அதுவேயாகஉள்ள பரம்பொருளின் மடியில் தான் அவற்றிற்கான அடிப்படை இருக்க வேண்டும், வேறு எங்கும் அல்ல.

இந்த வகையில் தீர்மானிப்பது எல்லாக் காலத்திற்குமான ஆன்மிகவாதிகளின் குறிப்பிடத்தக்க முன்முடிவுகளையும் தவறான எண்ணங்களையும் கட்டமைக்கிறது. இவ்வகையான மதிப்பீடுகள் அவர்களுடைய அனைத்து தர்க்க ரீதியான போக்குகளின் பின்புலத்தில் கவிந்திருக்கிறது. இது “அறிவு குறித்து அவர்களைத் தொல்லைப்படுத்தும் “விசுவாசத்தைச்சார்ந்தது. மெய்மை என இறுதியாகப் புனிதப்படுத்தப்பட்டவிசுவாசத்தைச்சார்ந்தது. ஆன்மிகவாதிகளின் விசுவாசம் என்பது எதிர்நிலை மதிப்பீடுகளில் உள்ள அடிப்படை விசுவாசம் தான். இது அவர்களுக்குள் அதீத எச்சரிக்கை வாய்ந்ததாக நிகழவில்லை. அனைத்தும் சந்தேகப்படுவதற்குரியதேஎன்ற டெகார்டிசிய உறுதி எடுத்துக் கொண்டுள்ள பெரும்பாலோனோருக்கும் கூட, உறுதியாக, மிகத் தேவைப்படும் இடத்தில் ஒருவர் சந்தேகப்படுவது சரியானதே என்பது தோன்றுவதில்லை.

ஒருவர், எதிர்நிலைகள் என்பவை உண்மையில் உள்ளனவா என்று முதலில் சந்தேகப்பட வேண்டும். இரண்டாவதாக, ஆன்மிகவாதிகள் தங்கள் முத்திரையைப் பதிக்கின்ற இந்த பிரபல மதிப்பீடுகளும் எதிர்நிலை மதிப்புகளும் வெறும் மேம்போக்கான கணிப்புகள் மட்டுமல்ல, அவை தற்காலிகமான புறத் தோற்றங்கள் கூட. அவை உள்ளவாறே ஒரு ஓவியர் உபயோகப்படுத்தும் பிரதிபலிப்பைப் பெறுவதற்காக சில வேளை மூலை முடுக்குகளிலிருந்தும், கீழ்ப் புறத்திலிருந்தும், தவளைப் பாய்ச்சல் பார்வையிலிருந்தும் கசியும் புறத் தோற்றங்கள். மெய்மை, உண்மை, சுயநலமின்மை ஆகியன அனைத்து மதிப்புகளுக்கும் தகுதி உடையவையாகின்றன. வாழ்வுக்கான உயர் தன்மையுள்ள, உயர்ந்தபட்ச அடிப்படையான வாழ்க்கை மதிப்பு வஞ்சகத்திற்கு, சுயநலத்திற்கு, காமத்திற்கு காரண காரியமாக அமைவது இன்னமும் சாத்தியம். உயர் தன்மையுடன் தொப்புள் உறவுள்ள, முடிச்சிடப்பட்டுள்ள வஞ்சகத்துடனும் எதிர்நிலைகள் எனத் தோற்றம் கொள்பவற்றுடன் தொடர்புள்ள நல்லது மற்றும் போற்றுதலுக்குரியவற்றின் மதிப்புகளைக் கட்டமைப்பது கூடச் சாத்தியம், சாராம்சத்தில் அவற்றுடன் இணைந்ததாகக் கூட இருக்கலாம். இருக்கலாம் தான்!

ஆனால், இவ்வகையான ஆபத்தான “இருக்கலாம்”-களுடன் அக்கறை கொள்ளும் சக்தி யாரிடம் உள்ளது? அதற்காக தத்துவவாதிகளின் ஒரு புதிய இனங்களின் வருகைக்காக உண்மையில் காத்திருக்க வேண்டும். இதுவரை நாம் அறிந்தவர்களிடமிருந்து உரையாடலின் சுவை மற்றும் மனப்பாங்கு பெற்றதைப் போல, அதாவது ஒவ்வொரு அர்த்தத்திலும் ஆபத்தான “இருக்கலாம்”-களின் தத்துவவாதிகளின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும்.


எல்லாத் தீவிரத்துடனும் புதிய தத்துவவாதிகள் தோன்றுவதை நான் காண்கிறேன்.

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...