Saturday, April 27, 2013

மேலும் ஒரு நாள் - 1

மோகன ரவிச்சந்திரன்

அவர்களிருவரும் அருகருகே நின்றபடி
ஒரு கோப்பின் பக்கங்களை
மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்
அவளது சுவாச நெடி தன் மீது மோதி விடாத அளவு
இடைவெளிவிட்டு சற்று ஒதுங்கி நிற்கிரானவன்
மின் விசிறிக் காற்றில் அலையும்
சுடிதாரின் துப்பட்டாவோ
குதிரை வால் கொண்டையிலிருந்து விலகிய
கூந்தலின் ஒரு இழையோ
தன்னைத் தொட்டு விடாதபடி
கவனமாக இருக்கிறான்
எழுத்துக்களின் மீது ஊர்ந்து செல்லும்
அவளது விரல்கள்
எழுத்துக்களின் ரகசியத்தை உணர்த்துகின்றன
கோப்பினைப் பிடித்திருக்கும்
அவனது இடது கையில் தெறிக்கும்
பதற்றத்தை மறைப்பதற்காக
விரைவாகப் பக்கங்களைப் புரட்டுகிறான்
காகிதங்களின் திரும்புதலில்
சதை மேகங்கள் மோதுகின்றன
அவனது விரலில் நெருப்பு பரவுகிறது
அவள் மேலும் நெருங்கி வந்து வாசிக்கிறாள்
அவன் கற்பனைகளைக் கடந்து
விலகி விலகி ஓடுகிறான்
எல்லையின்மையில் மிதக்கிறது
பசலை பாய்ந்த அவள் உடம்பு
இருவரும்
அவரவர் இருக்கைக்குத் திரும்புகிறார்கள்
கோப்பு இன்னமும் மேலாளரின் மேசை மீது தான் கிடக்கிறது.

Thursday, April 25, 2013

நட்சத்திரங்களோடு வாழ்பவன் 

மோகன ரவிச்சந்திரன்

காய்ந்த மரக்கிளைகள் எனப் பிரியும் தண்டவாளங்களின் அருகே
நடக்கிறேன்
சரியான இடத்தைத் தேர்வு செய்ய.
ரயிலின் ஓசை கேட்டவுடன்
கழுத்தைத் தண்டவாளத்தின் மீது பொருத்த வேண்டும்
சக்கரங்களில் மிதிபட ஏதுவாக
தப்பித்துச் செல்ல அவகாசம் தராமல்.
கருமையான் வானம் நட்சத்திரங்களின்றி
நடந்து வருகிறது கூடவே.
பறவைகள் அனைத்தும் ஏற்கனவே
தத்தம் கூடு சேர்ந்திருக்க வேண்டும்.
ஓரிரு மனித உருவங்கள் வெகு தொலைவில்
நிழலாய்த் தெரிகின்றன.
ரயில் வரும் நேரத்தை உத்தேசமாய்க் கணித்திருந்தேன்.
ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில்
தண்டவாளத்தின் முன்பாக மண்டியிட்டு அமர்கிறேன்.
எனது உறவின் இழையில் இதுவரை பிணைந்தவர்களின் முகங்களை
ஒவ்வொன்றாகத் திரையில் ஓட விடுகிறேன்.
நேரம் அதிகமில்லை என்பதால்
கலவரத் திரையில் முகங்கள் வேகமாக ஓடுகின்றன
அடையாளம் தெரியாதபடி.
துணிந்து நினைவுகளைத் துரத்தி விட்டு
மல்லாந்து படுத்து கழுத்தைத் தண்டவாளத்தின் மீது பொருத்துகிறேன்.
கண்களைச் சற்று அகலமாகத் திறக்க
வானம் தெரிகிறது.
வானத்தில் இரண்டு நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.
எழுந்து வீடு திரும்புகிறேன்.


Thursday, April 11, 2013

 பால் வெலரி கவிதை

காலடிகள்

எனது அமைதியின் குழந்தைகளான உமது காலடிகள்
புனிதமாக, வெகு நிதானத்துடன் பதிக்கப்படுகின்றன
எனது கண்காணிப்பின் படுக்கை நோக்கி
ஊமையாக நகர்ந்து உறைகின்றன

தூய, தெய்வீக நிழலாக இல்லாதவர்கள்
மென்மையானவர்கள்,
உமது காலடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன !
கடவுளர்களே !... நான் யூகித்த பரிசுகள் அனைத்தும்
இந்த வெற்றுப் பாதங்களை அடைகின்றன !

உமது மேம்பட்ட உதடுகளால்
அவற்றை அழிக்க முனைகிறீர்கள் , எனில்
எனது சிந்தனைகளின் ஒரு வசிப்பிடம்
ஒரு முத்தத்தின் ஆகாரம்

இந்த இளம் செயலுக்கு அவசரப்படவில்லை
மென்மையாகவும் மென்மையற்றதாகவும் இருப்பதற்கு, இல்லையா?
ஏனெனில் நான் உமக்காகக் காத்திருப்பதில் திளைத்தேன்
மேலும் எனது இதயமே உமது காலடிகள்


தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 

Friday, April 5, 2013

Stephane Mallarme poem

ஸ்டீபன் மல்லார்மே கவிதை 

புனிதமானவள் 

சன்னலில் ரகசியமாக ஒளிந்தபடி 
முன்னர் புல்லாங்குழல் அல்லது மாண்டலின் என அறியப்பட்ட 
தகதகக்கும் அவளுடைய இசைக்கருவியின் பொன் மெருகை 
மெதுவாக உதிர்க்கும் முதிய சந்தன மரத்துண்டு 
கம்பீரமான ஓடை குறித்து உரைக்கும் 
பழமை வாய்ந்த புத்தகத்தை விரித்தபடி 
சோபையற்ற புனிதமான ஒரு உயிராக இருக்கிறது
முன்னர் 
தெளிவற்ற உச்சரிப்புக்கும் 
ஒரு நாளின் இறுதியில் நடைபெறும் 
ஒழுங்கு குலையாத வழிபாட்டில் பாடப்படும் 
இரவுப் பாடலுக்கும் ஏற்றபடி 
காட்சிப்படுத்தும் சன்னலில் 
(காட்சிப்படுத்துதல் போல மின்னும் கறை படிந்த கண்ணாடி)
மாலை நேரச் சிறகுடன் 
தேவதையால் வடிவமைக்கப்பட்ட ஒரு யாழ் 
உவகை பொங்கும் நடனத்தால் மெருகேற்றுகிறது 
முதிய மரத்துண்டோ அல்லது பழமையான புத்தகமோ 
எதுவுமில்லாமல் 
பெரும் இரைச்சலுடன் நெருக்கமாக இணைந்து முன் நகரும் 
இடையூரற்ற மக்கள் திரளுக்காக 
பெருமிதத்துடன் அவள் இறுக அணைக்கிறாள் 
ஏதுவான ஒரு பறவையின் சிறகுத் தொகுதி மீது 
நிசப்தமான ஒரு இசைக் கலைஞனை.

 
ஆங்கிலத்தில் : ஹென்றி பியரி 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 



மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...