Thursday, December 12, 2013

கவிஞனின் தொழில்
அமி லோவல்
ஒரு நாற்காலியை எப்படி உருவாக்குவது என முதலில் தெரிந்து கொள்ளாமல் ஒரு மனிதனால் நாற்காலியை உருவாக்க முடியும் என யாரும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் ஒரு கவிஞன் உருவாக்கப்படுவதில்லை, அவன் பிறக்கிறான், அவனுடைய கவிதைகள் தாமாகவே அவனது நிரம்பி வழியும் இதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிறது என ஒரு பிரபலமான கருத்து நிலவுகிறது. உண்மையாகவே கவிஞன் அவனுடைய தொழிலை ஒரு அமைச்சரவையை உருவாக்குதல் போல, அதே பாணியில், அதே கடும் பிரயத்தனங்களுடன் கூடிய அக்கறையுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய இதயம் உயர்ந்த சிந்தனைகளாலும் தீப்பொறி என மின்னும் கற்பனைகளாலும் பிரவகிக்கலாம், ஆனால் எழுதப்படுகிற வார்த்தைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் போனால், அவன் ஒரு கவிஞன் என உரிமை கோர வாய்ப்பில்லை. ஆகவே, ஒரு கைவினைஞர் தமது தொழில் நுட்பம் குறித்து விளக்கவும் விவரிக்கவும் ஒரு சில தருணங்களைச் செலவிட்டதற்காக மன்னிக்கப்படலாம். உள்ளார்ந்த ஆய்வாக நிலைநிறுத்த முடியாத அழகின் படைப்பு குறைபாடு உடையதாகும், மலிவான கூறுகளால் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டதாகும்.   
முதலில், நான் எனது உறுதியான நம்பிக்கையைக் குறிப்பிட விரும்புகிறேன், கவிதை கற்பிக்க யத்தனிக்கக் கூடாது, அது வெகு எளிதாகத் தோன்ற வேண்டும், ஏனென்றால் அது ஒரு படைக்கப்பட்ட அழகு, சில சமயங்களில் அந்த அழகு திகிலூட்டும் விகாரத்தின் அழகாகக் கூட இருக்கலாம். ஒழுக்கவியல் குறித்த போதனைகளைக் கற்பிக்கச் சொல்லி மரங்களிடம் நாம் கேட்கவில்லை. வீடு பேற்றைப் போதிப்பவர் மட்டுமே அவற்றின் மீது பிரதிகளைப் பிணைப்பது அவசியம் என நினைக்கிறார். இந்தப் பிரதிகள் முட்டாள்தனமானவை என்பது நமக்குத் தெரியும். கலை, ஓவியம், சிற்பம் அல்லது கவிதைகளின் படைப்புகளில் ஒரு கருத்து மாறுபாடற்ற ஒழுக்கவியல் குறித்து எழுதுவது என்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல, அது கோழைத்தனமானது, இழிவானதும் கூட. நாம் ஒரு அழகின் மீது ஐயம் கொள்ளும் போது, நாம் அரைகுறையாகப் புரிந்துள்ளோம், நமது வீறாப்பான சிந்தனைகளுடன் அவசரப்படுகிறோம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நாம் “இப்பேரண்டத்தின் உண்மைகளை ஒப்புக் கொள்வதிலிருந்து” எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம்! பெருநிலப் பகுதிகளையும் சமுத்திரங்களையும் தூக்கி எறியும் இந்தப் பேரண்டம் அவற்றை எவ்வித விளக்கமும் இல்லாமல் விட்டு விடுகிறது. கலை என்பது இரவு பகல் சமமாக இருக்கும் வேளைகளில் எழும் புயல் காற்றைப் போலவோ அல்லது புவிஈர்ப்பு விசைக் கோட்பாடு போலவோ இப்பேரண்டத்தின் அதிகபட்சச் செயல்பாடு போன்றதுதான்; அது ஒரு சின்னஞ்சிறிய ஒப்பனை வேலைப்பாடு மட்டுமே, அல்லது மிகப்பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கருதுவதற்கு நாம் வற்புறுத்துகிறோம், இல்லாவிட்டால் அது அழகான உச்ச உணர்ச்சிகளைத் தொங்கவிடும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்! 
  
தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

Saturday, May 11, 2013

வாக்குமூலக் கவிதைகள் 

கோவை இலக்கியச் சந்திப்பில் கவிஞர் சுகிர்தராணியின் உரையில் சிலாகிக்கப்பட்ட Apologetic Literature என்பது ஏற்கெனவே வளர்த்தெடுக்கப்பட்ட Confessional Poetry -யின் சாரம்சத்தைப்  பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. அமெரிக்கக் கவியான ராபர்ட் லோவலின் படைப்புக்களில் இத்தகைய கவித்துவக் குரலைக் கேட்க முடியும். அதன் பின்னர் சில்வியா பிளாத்தின் கவிதைகளில் லோவலைப் போலல்லாமல் நிதர்சனமான சுய களிப்பைத் தூண்டுவதை விட, ஒரு சுய வரலாற்று வலி மற்றும் துயர உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக இத்தகைய குரல் ஊடாடுவதைக் கேட்க முடியும்.

Confessional Poetry என்ற சொல்லை ரோசந்தால் முதன் முதலாக லோவலை மனதில் வைத்தே பயன்படுத்தினார். அப்போது லோவலின் கவிதைகள் பாலியல் குற்ற உணர்வு, போதைக்கு அடிமையாதல், மனநல விடுதிகளில் தென்படும் தனிமை உணர்வு போன்றவற்றின் பக்கம் திரும்பியிருந்தது. சில்வியா பிளாத்தையும் ஒரு ஒப்புதல் வாக்குமூலக் கவியாகவே காணும் ரோசந்தால், அதற்குக் காரணமாகச் சொல்வது பிளாத்தின் உளவியல் காயமும் அவமதிப்பும் அவருடைய நாகரிகத்தைத் தோலுரித்துக் காட்டும் விதமாக ஒரு கவித்துவக் குரலைத் தமது கவிதைகளின் மையத்தில் நிறுவியதுதான். ஆனால் தெட் ஹ்யுஸ் இதை மறுத்தார். சுய வரலாற்று விவரங்களை லோவலை விடவும் அதி நுட்பமாக ஒரு அடையாளமூட்டும் வழியில் தமது கவிதைகளில் பிளாத் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் லோவலின் படைப்புக்களில் உள்ள யதார்த்த நிலைப்பாடு பிளாத்தின் கவிதைகளில் விடுபட்டுள்ளது என்னும் கருத்தும் நிலவுகிறது.

ஆனால் நாம் மறு அவதானிப்பு செய்ய விரும்புவது கவிதைகளில் ஊடாடும் கவித்துவக் குரலின் இயல்பு எவ்வளவு தூரம் ஒரு கவிதையை வாக்குமூலக் கவிதையாக மாற்றுகிறது என்பதைத்தான்.

லோவலின் கவிதைகளிலிருந்து பிளாத்தின் கவிதைகளை வேறுபடுத்திக் காட்டுவது கவிதைக்குள் செயல்படும் ஒரு குரல் தான் என்பதில் ஐயமில்லை. லோவலிடம் இருப்பது இலக்கியச் சுயம். அது ஒரு சுய எதிர்ப்புக் குரலாக, பணிவுள்ள குரலாக, வேடிக்கைமிக்க குரலாக அதீத உணர்வுடன் கட்டமைக்கப்படுகிறது. இந்தத் தருணங்களில் தமது குறைபாட்டை, தமது மடத்தனத்தை, தமது பெருந்துயரை, மற்றவர்கள் மீதான தமது வலியின் கசப்பான அனுபவத்தை லோவல் வெளிப்படுத்தும் போது உண்மையில் அவர் தகவல்களை வெளிப்படுத்துகிறார். அவை அவருக்கு தாழ்மை உணர்ச்சி மிக்கவையாகவோ அல்லது தப்பெண்ணம் கொண்டவையாகவோ இருக்கின்றன. இந்தத் தொனியில் லோவலை அணுகினால், அவர் கவிதைகளில் செயல்படும் குரல் ஒரு வாக்குமூலச் செயல்பாடாக ஒலிப்பதை உணரலாம். வாசிப்பவனாக மன்னிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை என்றாலும் கூட, லோவலின் தன் மீதே குற்றம் சுமத்தும் பாங்கு தீர்ப்பு சொல்வதை அசாத்தியமாக்குகிறது.

சில்வியா பிளாத்தின் கவிதைகள் வேறு கோணத்தில் அமைந்தவை. பிளாத்தின் கவிதையில் இயங்கும் குரல் சிலரைத் தாயாகவோ அல்லது தந்தையாகவோ அழைக்கிறது. குறிப்பிட்ட தன்மை மீது போதாமை கொண்ட குரலாகத் தொனிக்கிறது. அது பொதுமைப்படுத்தப்பட்ட குரல், நிதர்சனமானதல்ல அதன் எல்லைகளை வெளிப்படுத்த நாடகப் பாங்கான திறமையைக் கைவசம் கொண்டுள்ள வகையைச் சார்ந்தது. பிளாத் வெளிப்படுத்தும் தகவல்கள் போதுமான அளவு தப்பெண்ண உணர்வுகளை ஊட்டுகின்றன. பிளாத் வசிப்பவன் ஒரு புண்படுத்தும் உணர்வை அனுபவிக்கவே ஆசை கொள்கிறார். ஒரு மென்மையான உணர்வு இல்லாததாகவே கவித்துவக் குரலை வெளிப்படுத்துகிறார். மென்மைத் தன்மை என்பது கவிதையில் இயங்கும் குரலைத் தீர்மானிக்கும் நேர்த்தியான அளவுகோல் அல்ல. எனினும் ஒரு குறிப்பிட்ட போக்கில் தப்பெண்ணம் கொண்ட உணர்வை அது வெளிப்படுத்துகிறது. பிளாத்தின் கவிதையில் வெளிப்படும் அவமதிக்கப்பட்ட குரல் தமது துயரத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை. இந்த மனப்பாங்கு லோவலின் குரலைப் போலல்லாமல் எளிதில் பாதிப்பை உருவாக்ககூடியதாக உள்ளது. இக்கவிதைகளின் செயல் திறனை உற்றுப் பார்த்தால், கவிதையில் ஊடாடும் குரலையும் அந்தக் குரலுக்கும் கவிஞனுக்கும் இடையே உள்ள உறவையும் மிகச் சரியாகக் கணிக்க முடியும்.

இனி பின்நவீனத்துவக் கூறுகளைச் சற்று பார்க்கலாம்.

1. உயர்வு, தாழ்வுகளுக்கு இடையே உள்ள எல்லைகளை ஒதுக்குவது.
2. கடுமையான வகை மதிப்புகளை ஒதுக்குவது.
3. அலங்கார உடுத்தல்களை வற்புறுத்துவது.
4. நையாண்டி போலிகள்.
5. எதிர்ச் சொற்றொடர்.
6. விளையாட்டுத்தனம்.

பின்நவீனத்துவக் கலையும் கோட்பாடும் அனிச்சைச் செயல், சுய பிரக்ஞை, சிதிலம், தொடர்ச்சியின்மை, ஐயப்பாடு, உடனிகழ்வு, மேலும் கட்டவிழ்க்கப்பட்ட , மையம் அழிக்கப்பட்ட, இரக்க இயல்பற்ற உட்பொருளை வலியுறுத்துவது போன்றவற்றிற்குச்  சாதகமானவை.  பின்நவீனத்துவம் சிதிலம் பற்றிய, தற்காலிகம் பற்றிய அல்லது ஒவ்வாமை பற்றிய கருத்து பற்றி புலம்புவதில்லை. மாறாக, அவற்றைக் கொண்டாடுகிறது. இந்த உலகம் அர்த்தம் அற்றதா? கலை அர்த்தத்தை உருவாக்கும் என பாசாங்கு செய்ய வேண்டியதில்லை, வெறுமனே இந்த அர்த்தமின்மைகளோடு விளையாடுவோம் எனச் சொல்லிச் செல்கிறது கோட்பாடு.

இந்தப் புரிதல்களோடு பின்நவீனத்துவ தளத்தில் வாக்குமூலக் கவிதைகளும் இயங்குவதை ஒப்பிட்டு உணர முடியும். எனவே, பின்நவீனத்துவக் கூறுகள் காலம் கடந்து முன்னும் பின்னும் அனைத்துப் படைப்புக்களிலும் பரவிக் கிடக்கின்றன என்னும் முடிவுக்கு வரும் அதே நேரத்தில் வாக்குமூலக் கவிதைகளும் அனைத்துக் கால கட்டங்களிலும் படைக்கப்பட்டு வந்துள்ளன என்னும் முடிவுக்கும் வரலாம்.

தமிழில் இது போன்ற அணுகுமுறை மேலும் செறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சுகிர்தராணியின் இலக்கியச் சந்திப்பு உரை அமையப் பெற்றது மெச்சத் தகுந்தது.

மோகன ரவிச்சந்திரன்
(யுராப் மற்றும் மேரி க்லாஜஸ் ஆகியோரின் கட்டுரைகளைத் தொகுத்து எழுதப்பட்டதாகும்.)

Saturday, April 27, 2013

மேலும் ஒரு நாள் - 1

மோகன ரவிச்சந்திரன்

அவர்களிருவரும் அருகருகே நின்றபடி
ஒரு கோப்பின் பக்கங்களை
மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்
அவளது சுவாச நெடி தன் மீது மோதி விடாத அளவு
இடைவெளிவிட்டு சற்று ஒதுங்கி நிற்கிரானவன்
மின் விசிறிக் காற்றில் அலையும்
சுடிதாரின் துப்பட்டாவோ
குதிரை வால் கொண்டையிலிருந்து விலகிய
கூந்தலின் ஒரு இழையோ
தன்னைத் தொட்டு விடாதபடி
கவனமாக இருக்கிறான்
எழுத்துக்களின் மீது ஊர்ந்து செல்லும்
அவளது விரல்கள்
எழுத்துக்களின் ரகசியத்தை உணர்த்துகின்றன
கோப்பினைப் பிடித்திருக்கும்
அவனது இடது கையில் தெறிக்கும்
பதற்றத்தை மறைப்பதற்காக
விரைவாகப் பக்கங்களைப் புரட்டுகிறான்
காகிதங்களின் திரும்புதலில்
சதை மேகங்கள் மோதுகின்றன
அவனது விரலில் நெருப்பு பரவுகிறது
அவள் மேலும் நெருங்கி வந்து வாசிக்கிறாள்
அவன் கற்பனைகளைக் கடந்து
விலகி விலகி ஓடுகிறான்
எல்லையின்மையில் மிதக்கிறது
பசலை பாய்ந்த அவள் உடம்பு
இருவரும்
அவரவர் இருக்கைக்குத் திரும்புகிறார்கள்
கோப்பு இன்னமும் மேலாளரின் மேசை மீது தான் கிடக்கிறது.

Thursday, April 25, 2013

நட்சத்திரங்களோடு வாழ்பவன் 

மோகன ரவிச்சந்திரன்

காய்ந்த மரக்கிளைகள் எனப் பிரியும் தண்டவாளங்களின் அருகே
நடக்கிறேன்
சரியான இடத்தைத் தேர்வு செய்ய.
ரயிலின் ஓசை கேட்டவுடன்
கழுத்தைத் தண்டவாளத்தின் மீது பொருத்த வேண்டும்
சக்கரங்களில் மிதிபட ஏதுவாக
தப்பித்துச் செல்ல அவகாசம் தராமல்.
கருமையான் வானம் நட்சத்திரங்களின்றி
நடந்து வருகிறது கூடவே.
பறவைகள் அனைத்தும் ஏற்கனவே
தத்தம் கூடு சேர்ந்திருக்க வேண்டும்.
ஓரிரு மனித உருவங்கள் வெகு தொலைவில்
நிழலாய்த் தெரிகின்றன.
ரயில் வரும் நேரத்தை உத்தேசமாய்க் கணித்திருந்தேன்.
ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில்
தண்டவாளத்தின் முன்பாக மண்டியிட்டு அமர்கிறேன்.
எனது உறவின் இழையில் இதுவரை பிணைந்தவர்களின் முகங்களை
ஒவ்வொன்றாகத் திரையில் ஓட விடுகிறேன்.
நேரம் அதிகமில்லை என்பதால்
கலவரத் திரையில் முகங்கள் வேகமாக ஓடுகின்றன
அடையாளம் தெரியாதபடி.
துணிந்து நினைவுகளைத் துரத்தி விட்டு
மல்லாந்து படுத்து கழுத்தைத் தண்டவாளத்தின் மீது பொருத்துகிறேன்.
கண்களைச் சற்று அகலமாகத் திறக்க
வானம் தெரிகிறது.
வானத்தில் இரண்டு நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.
எழுந்து வீடு திரும்புகிறேன்.


Thursday, April 11, 2013

 பால் வெலரி கவிதை

காலடிகள்

எனது அமைதியின் குழந்தைகளான உமது காலடிகள்
புனிதமாக, வெகு நிதானத்துடன் பதிக்கப்படுகின்றன
எனது கண்காணிப்பின் படுக்கை நோக்கி
ஊமையாக நகர்ந்து உறைகின்றன

தூய, தெய்வீக நிழலாக இல்லாதவர்கள்
மென்மையானவர்கள்,
உமது காலடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன !
கடவுளர்களே !... நான் யூகித்த பரிசுகள் அனைத்தும்
இந்த வெற்றுப் பாதங்களை அடைகின்றன !

உமது மேம்பட்ட உதடுகளால்
அவற்றை அழிக்க முனைகிறீர்கள் , எனில்
எனது சிந்தனைகளின் ஒரு வசிப்பிடம்
ஒரு முத்தத்தின் ஆகாரம்

இந்த இளம் செயலுக்கு அவசரப்படவில்லை
மென்மையாகவும் மென்மையற்றதாகவும் இருப்பதற்கு, இல்லையா?
ஏனெனில் நான் உமக்காகக் காத்திருப்பதில் திளைத்தேன்
மேலும் எனது இதயமே உமது காலடிகள்


தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 

Friday, April 5, 2013

Stephane Mallarme poem

ஸ்டீபன் மல்லார்மே கவிதை 

புனிதமானவள் 

சன்னலில் ரகசியமாக ஒளிந்தபடி 
முன்னர் புல்லாங்குழல் அல்லது மாண்டலின் என அறியப்பட்ட 
தகதகக்கும் அவளுடைய இசைக்கருவியின் பொன் மெருகை 
மெதுவாக உதிர்க்கும் முதிய சந்தன மரத்துண்டு 
கம்பீரமான ஓடை குறித்து உரைக்கும் 
பழமை வாய்ந்த புத்தகத்தை விரித்தபடி 
சோபையற்ற புனிதமான ஒரு உயிராக இருக்கிறது
முன்னர் 
தெளிவற்ற உச்சரிப்புக்கும் 
ஒரு நாளின் இறுதியில் நடைபெறும் 
ஒழுங்கு குலையாத வழிபாட்டில் பாடப்படும் 
இரவுப் பாடலுக்கும் ஏற்றபடி 
காட்சிப்படுத்தும் சன்னலில் 
(காட்சிப்படுத்துதல் போல மின்னும் கறை படிந்த கண்ணாடி)
மாலை நேரச் சிறகுடன் 
தேவதையால் வடிவமைக்கப்பட்ட ஒரு யாழ் 
உவகை பொங்கும் நடனத்தால் மெருகேற்றுகிறது 
முதிய மரத்துண்டோ அல்லது பழமையான புத்தகமோ 
எதுவுமில்லாமல் 
பெரும் இரைச்சலுடன் நெருக்கமாக இணைந்து முன் நகரும் 
இடையூரற்ற மக்கள் திரளுக்காக 
பெருமிதத்துடன் அவள் இறுக அணைக்கிறாள் 
ஏதுவான ஒரு பறவையின் சிறகுத் தொகுதி மீது 
நிசப்தமான ஒரு இசைக் கலைஞனை.

 
ஆங்கிலத்தில் : ஹென்றி பியரி 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 



மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...