அவசரம்
தொடர் ஓட்டப் பந்தயத்தில்
விரைந்தோடி
மந்திரக் கோலைக் கைமாற்றுகையில்
தவறி விழுகிற மந்திரக்கோலைக்
குனிந்து எடுக்க அவகாசமில்லாமல்
வெறுங்கையோடு ஓடுகிறான்
தொடர் ஓட்டக்காரன்.
கனம்
அடிக்கடி தொலைந்து விடுகிறது
இந்த மனது
தேடிக் கண்டெடுக்கும் பொழுது
கனம் சற்று அதிகரிக்கிறது.
தொலைந்து தொலைந்து
கனத்தைக்
கூட்டிக்கொண்டே போனால்
உடல் எப்படித் தாங்கும்
கனத்த அறிவை?
சலிப்பு
இரவு காத்திருக்கிறது
கனத்த மெளனத்துடன்.
மின்கம்பிகளின் அதிர்வுகளையும்
நாய்கள் ஊளையிடுதலையும்
ஒதுக்கிவிட்டு
சேவலின் பாடலை உற்றுக் கேட்க
காதுகளைக் கவனமாகத் தீட்டியபடி
காத்திருக்கிறது
பூக்கும் பொழுதிலிருந்து
வேறு பெயரில் உலவ.
உறவு
விரல்களின் அதிர்வுகளை
கயிறுகளின் வழியே உள்வாங்கி
உடலசைவுகளில் வெளிப்படுத்தும்
சித்திரங்கள்
குதித்துக் குதித்து
ஓடியாடி ஆலிங்கனம் புரிகின்றன.
உதடுகளைக் குவித்து
நாயகியின் முகத்தை நெருங்குகிறான்
நாயகன்
முத்தமிடும் ஏக்கங்களுடன்.
அவள் முகம் துவண்டு கிடக்கிறது தோள்மீது.
முகத்தைப் பிணைத்திருந்த கயிறு
அறுந்து கிடக்கிறது.
அன்பு
உறுமி ஓலமிட்டு
ஒளிக்கீற்றுகளால் வருகையை அறிவித்தவாறு
மனிதர்களை மரத்தடிக்கோ
அல்லது
பேருந்து நிறுத்தத்திற்கோ
பத்திரமாய் அனுப்பிவிட்டு
யாருமற்ற பெருவெளியில்
நிதானமாய்ப் பெய்கிறது
மழை.
மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment